திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் குருநாதன் கோயில் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. உடனே குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்த போலீசார், அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் கீதா. சாந்தராமன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குருநாதன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சல்லடை சல்லடையாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில், அதுபோன்ற எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து தகவல் கொடுத்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் விசாரணை அடிப்படையில் குருநாதன் கோயில் அருகே முட்புதரில் ஒருவரது உடல் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நள்ளிரவில் போலீசார் உடலை தோண்டி எடுத்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஆறுமுகம் என்பதும், அவர் கட்டிட தொழிலாளி என்பதும் கண்டறியபட்டது.

இதனைத்தொடர்ந்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை குறித்து தீவிர விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நான்கு பேரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஆறுமுகம் என்பவருக்கும், கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவருடைய உறவினர் இடையே காதல் விவகாரம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மொட்டை மாடியில் நடந்து கொண்டே செல்போன் பேசிய மாணவி கீழே விழுந்து 'மூளைச்சாவு'... பெற்றோர்கள் எடுத்த முடிவு!
இந்த பகையை மனதில் வைத்து மது குடிக்க அழைத்துச் சென்று ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி அங்குள்ள முட்புதூரில் குழிதோண்டி புதைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
சிறுவர்கள் தாங்கள் கொலை செய்தது குறித்து மதுபோதையில் ஊர் மக்களிடம் கூறியதாக தெரிகிறது. காதல் விவகாரத்தில், சிறுவர்கள் சேர்ந்து ஒருவரை கொலை செய்து புதைத்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்