திருவண்ணாமலை: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த பாண்டிச்சேரி - பெங்களூரு நெடுஞ்சாலையில், இன்று (ஏப்ரல் 13) அதிகாலை பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் கீழ்பெண்ணாத்தூர் அருகே சோ.காட்டுக்குளம் பகுதியில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொருங்கியதில், காருக்குள்ளே இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பின்னர், அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த நபர்களின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது பாண்டிச்சேரியைச் சேர்ந்த சைலேஷ் (38), சதீஷ்குமார் (52), ஸ்டாலின் (44), சரோப் (47) ஆகியோர் என்பதும், இவர்கள் நான்கு பேரும் லாரி உரிமையாளர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் நேற்று முன்தினம் (ஏப்ரல் 11 ஆம் தேதி) பாண்டிச்சேரியில் இருந்து தனது நண்பர்களுடன் சொந்தபணி காரணமாக பெங்களூரு சென்று, வேலையை முடித்து விட்டு மீண்டும் இன்று அதிகாலை திருவண்ணாமலை வழியாக பாண்டிச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் எனவும், அதனால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.