கோயம்புத்தூர்:ஈமு கோழி மோசடியில் ஈடுபட்டதாக ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் குருசாமி (40), கடந்த 2010-ஆம் ஆண்டில் பெருந்துறையில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதன் முட்டை, இறைச்சி போன்றவை அதிக விலை போகும் எனக்கூறி விளம்பரம் செய்தனர்.
முதல் திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஆறு ஈமு கோழி குஞ்சுகள் அளித்து, தீவனம், கொட்டகை அமைத்துக்கொடுப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும், பராமரிப்பு தொகையாக 2 ஆண்டுகளுககு மாதம் ரூ.6,000 ஆண்டு வெகுமதியாக ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும் என்று நம்பிக்கை கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இரண்டு ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என்று ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நிறுவனம் சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டது.
இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஈமு கோழிக்குஞ்சுகளை நிறுவனமே வைத்து பராமரித்து, 2 ஆண்டுகளுக்கு ரூ.7,000 மாதாந்திர ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், ஆண்டு வெகுமதியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும், இரண்டு ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தினர்.

இதனை உண்மை என நம்பி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோரும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்களில் முதலீடு செய்தனர். ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடுகளை பெற்றுக் கொண்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி, வாக்குறுதி அளித்தபடி பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தார். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் பதியப்பட்டது.
இதையும் படிங்க: காரில் மோதிய இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்-பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!
சேலத்தில் 385 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈமு கோழி உரிமையாளர் குருசாமி மோசடியில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.7.89 கோடி விதிக்கப்பட்டது. அபராத தொகையினை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரியில் வழங்கப்பட்ட தீர்ப்பு
சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமியின் வாக்குறுதியை நம்பி கோவை மாவட்டத்தில் 1,087 பேர் முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூபாய் 19.03 கோடி மோசடி செய்ததாக, 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றமான டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19.03 கோடி அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.