-By எஸ்.ஹூசைன்
சென்னை: M.S நகரில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கட்டுமானப் பணி நிறைவு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் ஒப்படைக்கபடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்த வகையில் பிழைப்புத் தேடி வருவோரை மொழி, மதம் என எந்த வேறுபாடின்றி அரவணைத்து கொள்கிறது சென்னை. 1970-களில் சென்னையில் குடிசைகள் நிறைய இருந்தன. இங்கு அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்ந்தன. இதற்கு முடிவுக் கட்டும் வகையில், அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி குடிசை மாற்று வாரியம் என்பதை உருவாக்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தார்.
குடிசை மாற்று வாரியம் சார்பில் முதலில் வடசென்னை பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன்பின் சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால் டாக்ஸ் சாலை பகுதியில் எம்.எஸ் நகர் என அழைக்கப்படும் மீனாம்பாள் சிவராஜ் நகரில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு, அதற்கு பதில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 1970 ஆம் ஆண்டு 176 குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு வசித்த கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த குடியிருப்புகள் 50 ஆண்டுகளை கடந்ததால் சிதிலமடைந்து, விரிசல் ஏற்பட்டு பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு அங்கு குடியிருந்தவர்களை வெளியேற்றி விட்டு அதனை மறு கட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள் கரோனா காலகட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கி தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்புகள் ரூபாய் 35 கோடி செலவில் A, B, C, D, E, F ஆகிய ஆறு பிளாக்குகளுடன் 308 வீடுகளுடன் பன்னடுக்கு குடியிருப்பாக கட்டப்பட்டுள்ளது. 11 தளங்களுடன் லிஃப்ட் வசதி, பால்கனி, மரக்கதவு, தீயணைப்பு வசதி, வெஸ்டன் கழிவறை, மழை நீர் சேகரிக்கும் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஒரு குடியிருப்பு 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டன.
ஆனால், கட்டுமானப் பணி முடிந்து ஒராண்டுக்கு மேலாகியும், இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. முன்பு இங்கு வசித்தவர்கள் வியாசர்பாடி, பெரம்பூர், பேசன் பிரிட்ஜ், கொண்டித் தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் M.S நகரில் வீடு ஒதுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பாஞ்சாலி என்ற மூதாட்டி, அந்த குடியிருப்பிற்கு அருகே சிறிய கொட்டகை போட்டு தங்கியுள்ளார். இது குறித்து மூதாட்டி பாஞ்சாலி கூறுகையில், ”M.S நகரில் பழைய குடியிருப்பு இருந்த காலத்திலிருந்து வாழ்ந்து வருகிறேன். பழைய குடியிருப்பு மிகவும் சிதிலமடைந்ததால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் M.S நகர் குடியிருப்பை இடித்தனர்.
எங்களால் மற்ற இடங்களில் வாடகை தர முடியாத ஏழ்மை நிலையில் உள்ளோம். எப்போது வீடு ஒதுக்கப்படும் என அதிகாரிகளிடம் கேட்டால் அடுத்த மாதம் என்கிறார்கள். 6 மாதமாக கேட்டு வருகிறோம். ஆனால் இப்போது இன்று, நாளை என கூறி நாட்களை கடத்துகின்றனர். வயிற்று பிழைப்புக்கு சிறிய பெட்டிக் கடையை வைத்து நடத்தி வருகிறேன். வீட்டுக்கு வாடகை தர முடியாததால் தற்போது பிளாட்பாரத்தில் வசிக்கிறேன். உடனடியாக எங்களுக்கு வீடு ஒதுக்கி தர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் அரசு பள்ளிகள் மீதான ஆர்வம் - நடப்பு கல்வி ஆண்டில் 3.12 லட்சம் மாணவர்கள் சேர்க்கை!
இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மீனம்பாள் சிவராஜ் நகரில் வீடுகளை ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
மழை, புயல், வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு நிரந்தரமான வீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை அரசு விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்பதே அந்த வசித்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.