சென்னை: சென்னை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (42). ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக கத்திப்பாரா மேம்பாலம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் திடீரென முத்துசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதன் பின்னர் 2 பைக்குகள், ஆட்டோ, கார் என்று அடுத்தடுத்த வாகனங்கள் மீது அந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் நூக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (32), மேற்கு கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த சுந்தர்ராஜ் (59) மற்றும் குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரை சேர்ந்த ஆராதனா (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விபத்து ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமானது என்பதும், அதை ஒட்டி வந்த ஓட்டுநர் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தாலுக்கா, லப்பைக்குடிகாடு, கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த புஷ்பராஜ் (39) என்பதும் தெரிய வந்தது.
மேலும் புஷ்பராஜ் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர், உடனே ரத்தப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புஷ்பராஜ் மதுபோதையில் இருப்பது உறுதியானது.
இதையடுத்து ஓட்டுநர் புஷ்பராஜை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றதிதில் ஆஜர்படுத்தினர். போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக புஷ்பராஜை வரும் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘எங்களுக்காக பேச யாருமே இல்லையா?’ - உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவர் 'திடீர்' மயக்கம்!
இந்த சம்பவம் காரணமாக சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன் 2 உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்