சென்னை:வடசென்னை மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வளிக்கும் வகையில் திருவொற்றியூரில் ரூ.272 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
வடசென்னை பகுதிக்குட்பட்ட கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தங்கள் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர். காசிமேடு துறைமுகம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது என்பதால், இப்போதைய சூழலில் இடநெருக்கடி ஏற்பட்டது. எனவே, திருவொற்றியூர் அருகே புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று வடசென்னை மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு திருவொற்றியூர் குப்பம் பகுதியில் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு திட்டமிடபட்டது. இதற்காக ரூ.272 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதிய மீன்பிடி துறைமுகத்துக்கான கட்டுமானப் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கின. இந்தப் பணி அணமையில் முடிவடைந்துள்ளது. சூரை மீன்பிடி துறைமுகத்தில், துறைமுக நிர்வாக கட்டிடம், வலைகளை பாதுகாப்பதற்கான அறை, அலை தடுப்பு வார்புகள், படகு நிறுத்தும் இடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நடிகர் ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனு தாக்கல்!
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "வட சென்னை மீனவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். துறைமுகப் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டதா என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். மீனவர்களின் நலனுக்கானவே சூரை மீன்பிடி துறைமுகம் செயல்படும்,"என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, துறைமுகத்தை மேலும் 100 மீட்டர் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஐஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கண்ட பிறகு சாத்தியக்கூறுகள் இருப்பின் விரிவுபடுத்தப்படும்,"என்று அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.