திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டபோது 18000 லிட்டர் டீசல் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆறுபேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தின் பேருந்துகள் திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இயங்கி வருகிறது. 1500க்கும் மேற்பட்ட பேருந்துகள் 30-க்கும் மேற்பட்ட பணிமனைகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக திருநெல்வேலி கோட்டத்திற்கு உட்பட்ட தாமிரபரணி பணிமனையில் 56க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. தணிக்கை குழு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக டீசல் இருப்பு கணக்கு உள்ளிட்ட ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்ததாக தெரிகிறது. இதில் கணக்கில் எழுதப்பட்டிருந்ததை விட 18 ஆயிரம் லிட்டர் டீசல் குறைவாக இருப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர் உயிரிழப்பு! காரணம் என்ன?
இதனை அடுத்து தணிக்கை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளது முதற்கட்டமாக தாமிரபரணி பணிமனையின் கிளை மேலாளர் கிருஷ்ணன் மற்றும் பண்டக காப்பாளர், இரண்டு உதவி பொறியாளர்கள் என ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியானது.
இது குறித்து பேசிய தாமிரபரணி பணிமனையின் ஊழியர்கள் சிலர்,"திருநெல்வேலி கோட்டத்தில் இருக்கக்கூடிய 50 சதவிகித பேருந்துகள் இயங்குவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. அந்த பேருந்துகளை லிட்டருக்கு 5.10 கி.மீ இயக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இது போன்ற பழைய பேருந்துகள் லிட்டருக்கு 4.5 கி.மீ மட்டுமே தருகின்றன. பேருந்துகளில் கூடுதலாக டீசல் போட்டுவிட்டு குறைவாக அதிகாரிகள் கணக்கு எழுதி உள்ளனர். நாள்தோறும் 500 லிட்டர் டீசலுக்கு மேல் கணக்கிற்கும் இருப்பிற்கும் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் 18,000 லிட்டர் டீசல் கணக்கில் வராததற்கு காரணமாக இருக்கலாம்," என்று கூறினர்.
இது தொடர்பாக பேசிய உயர் அதிகாரிகள்,"ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டீசல் திருட்டு போன்ற எந்த நிகழ்வும் நடைபெற இல்லை,"என்று கூறினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.