வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த எடைத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்- செல்வி தம்பதி. இவர்களின் 17 வயதான இளைய மகள் அண்மையில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) காலை 7 மணி அளவில் துணி துவைத்து வீட்டின் அருகே உள்ள இடத்தில் காய போட சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று சிறுமியின் காலில் கடித்துள்ளது.
இதனை அடுத்து வலியால் துடித்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் உடனடியாக சிறுமியை அழைத்துக் கொண்டு மராட்டியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: போலி ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட ரூ.4.8 கோடி மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - பண்ருட்டியில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி!
வேலூர் ஒடுக்கத்தூரில் 17 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுமி உயிரிழந்த விவகாரம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் கோரிக்கை:
வேலூரில் மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல், பாம்பு கடி, பூச்சிக்கடி, பிரசவம் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்கு 30 கிலோ மீட்டர் தூரம் வரும் பரிதாப நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து மலை கிராமப் பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாம்புகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை வனத் துறையினர் கண்காணித்து ஆய்வு செய்வதோடு, மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்