வேலூர்: பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி துணை முதல்வர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். வேலூரில் உள்ள பழமை வாய்ந்த கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் விரிவுரையாளர், தனக்கு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த மாதம் புகார் கொடுத்திருந்தார்.
இது குறித்து, வேலூர் அனைத்து மகளிர் போலீசார் பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் தடைச் சட்டம், பிஎன்எஸ் (BNS), பிரிவு 75,78, 115 (2), 316(2), 318(4) உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர். இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் கடந்த மாதம் 21 ஆம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அன்பழகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது மட்டுமின்றி கல்லூரி நுழைவுவாயிலின் கேட்டின் பூட்டை உடைத்து, பேரணியாக வந்து, அன்பழகனை கைது செய்யக் கோரி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களால் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்கள் கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்தனர்.

இதனையடுத்து கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் வேலூர் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து, அங்கு ராசனபள்ளி என்ற பகுதியில் பதுங்கி இருந்த அன்பழகனை நேற்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: “டாஸ்மாக் இங்கு திறக்க கூடாது”- போராட்டத்தில் குதித்த பெண்கள்!
இதனைத் தொடர்ந்து வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அன்பழகன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கல்லூரி துணை முதல்வர் அன்பழகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.