கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை, மார்த்தால் பகுதியில் அந்த ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாணவ மாணவிகளுக்காக ஒரு படிப்பகம் நடத்தி வருகின்றனர். இங்கு தினமும் அப்பகுதி மாணவ, மாணவிகள் வந்து செல்வது வழக்கம். இந்த படிப்பகத்தின் அருகில் உள்ள பகுதியில் செடி, கொடிகள் அடர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த புதர் பகுதியில் இருந்து இன்று (ஏப்ரல் 9) திடீரென கோழி ஒன்று அதிக சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தது.
கோழியின் சத்தம் கேட்டதும் உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட பெரிய மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்க முயற்சி செய்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து மலைப் பாம்பை லாவகமாகவும், பாதுகாப்பாகவும் பிடித்தனர். இதற்கிடையே அந்த கோழி உயிரிழந்தது.
இதன் பின்னர் இதுகுறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத் துறையினர் நாகர்கோவிலில் இருந்து திட்டுவிளை மார்த்தால் பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் இளைஞர்கள் பிடித்து வைத்து இருந்த மலை பாம்பினை வனத்துறை அலுவலர்கள் பத்திரமாக மீட்டு சென்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து கோழியை விழுங்க இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைபோல் தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வீரநாராயணமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் பிள்ளை. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பெருமாள். இன்று (ஏப்ரல் 9) மாலை வேலாயுதம் பிள்ளை வீட்டின் சமையல் அறையில் சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. தனது வீட்டுக்குள் சென்ற பெருமாள் சமையல் எரிவாயு சிலிண்டரில் பாம்பு சுருண்டு பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: Summer Special Trains: ''தென்மாவட்டங்களுக்கு போறீங்களா?'' - சிறப்பு ரயில்கள் லிஸ்ட் பாருங்க!
இதுகுறித்து உடனே மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து ஆரல்வாய்மொழி வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து எரிவாயு சிலிண்டரில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். இதன் பிறகே வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர், திட்டுவிளை பகுதியில் பிடிக்கப்பட்ட மலை பாம்பு மற்றும் வீரநாராயண மங்கலம் பகுதியில் பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு ஆகிய 2 பாம்புகளையும் வனத்துறையினர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்