சென்னை: ஐபிஎல் தொடரில் 1000 பவுண்டரிகள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடியது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, சால்ட் ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்த்தனர். இந்த நேரத்தில் 37 ரன்களுக்கு சால்ட் ரன் அவுட்டானார். அதேபோல் அதிரடியாக ஆடிய கோலி 22 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த படிக்கல் 1 ரன்னில் நடையை கட்டிய நிலையில், பட்டிதார் 25 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டான நிலையில், கடைசி கட்ட ஓவர்களில் டிம் டேவிட் சிக்சர் மழை பொழிந்தார். டிம் டேவிட் 37 ரன்கள் அடித்த நிலையில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்கு பெங்களூரு பவுலர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுத்தனர். டூ பிளசிஸ் (2), பிரேசர் மெக்கர்க் (7), அபிஷேக் பொரேல் (7), ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார். அவருடன் துணையாக அக்சர் படேல் (15), ஸ்டப்ஸ் (38) ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்த்தனர். கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்த நிலையில், டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 22 ரன்கள் எடுத்த விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் ஒரு பவுண்டரி அடித்த விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார். நேற்று டெல்லி கேப்டன் அக்சர் படேல் ஓவரில் பவுண்டரி அடித்து 1000 பவுண்டரிகள் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் சீசன் 2025: டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 721 பவுண்டரிகளும், 279 சிக்சர்களும் அடித்துள்ளார். மொத்தமாக சேர்த்து பவுண்டரிகள் பட்டியலில் 1000 என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ள விராட் கோலி, அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் (357), ரோகித் சர்மா (282) பிறகு மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்