ETV Bharat / sports

கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம்! வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் பங்கேற்ற நடப்பு உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று 41ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

வைஷாலி ரமேஷ்பாபு
வைஷாலி ரமேஷ்பாபு (PTI)
author img

By ETV Bharat Sports Team

Published : September 16, 2025 at 10:34 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், கேண்டிடேட்ஸ் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில், 'கிராண்ட் ஸ்விஸ்' செஸ் தொடரானது உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்ட இந்த தொடரில், மகளிருக்கான கடைசி சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதன் முடிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு 6 வெற்றி, 4 டிரா, 1 தோல்வியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

வைஷாலி சாம்பியன்

அதேசமயம், ரஷ்யாவைச் சேர்ந்த கேத்ரினா லாக்னோவும் 8 புள்ளிகளைப் பெற்றிருந்தார். இதனால் வைஷாலி மற்றும் கேத்ரினா இருவருக்கும் இடையே டை பிரேக்கர் சுற்றானது நடத்தப்பட்டது. இந்த சுற்றில், வைஷாலி ரமேஷ்பாபு வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், நடப்பு கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் சுற்றுக்கும் தகுதிப் பெற்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு கிரண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் வைஷாலி ரமேஷ் பாபு சாம்பியன் பட்டத்தை வென்று, கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ இரண்டாம் இடத்தையும், கஜகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற இந்திய வீராங்கனைகள் ஹரிகா துரோணவள்ளி 6.5 புள்ளிகளுடன் 14ஆம் இடத்தையும், வந்திகா அகர்வால் 5 புள்ளிகளுடன் 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பிரதமர், முதல்வர் வாழ்த்து

கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ் பாபுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் ஏமாற்றம்

அதேசமயம் ஓபன் சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த அனிஷ் கிரி, 11ஆவது சுற்றின் முடிவில் 8 புள்ளிகளை கைப்பற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று, கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இதில் ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாம் 7.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், பிரான்சின் அலிரேசா ஃபிரூஸ்ஜா 7.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அதேசமயம் இத்தொடரில் பங்கேற்ற நடப்பு உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் டி குகேஷ் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று 41ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தவிர்த்து இந்திய வீரர்கள் ஆர்.பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 35ஆவது இடத்தை பிடித்தார். மேலும் அர்ஜுன் எரிகைசி 7 புள்ளிகளுடன், 7ஆம் இடத்தையும், நிஹல் சரின் 7 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தையும், விதித் குஜராத்தி 7 புள்ளிகளிடன் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:

  1. ஆசிய கோப்பை: பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி 'குரூப் ஏ' பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்தியா!
  2. இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான டெஸ்ட்; முழு வீச்சில் தயாராகும் ஏகானா கிரிக்கெட் மைதானம்!

அவர்களைத் தவிர்த்து பிரனாவ் 22ஆம் இடத்தையும், ஹரிகிருஷ்ணா 26ஆவது இடத்தையும், ஆதித்யா மிட்டல் 37ஆவது இடத்தையும், நாராயணன் 39ஆவது இடத்தையும், ரௌனக் சத்வானி 48ஆவது இடத்தையும் பிடித்தனர். மேலும் ஆர்யன் சோப்ரா 58ஆவது இடத்தையும், அபிமன்யு புரானிக் 73ஆவது இடத்தையும், திவ்யா தேஷ்முக் 81ஆவது இடத்தையும், முரளி கார்த்திகேயன் 102 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.