ஆசிய கோப்பை: கடைசி வரை பயம் காட்டிய ஹாங்காங்... தட்டுத்தடுமாறி வென்ற இலங்கை!
ஹாங்காங் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Published : September 16, 2025 at 12:53 AM IST
சென்னை: ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது லீக் சுற்று போட்டியில் ஹாங்காங் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8 ஆவது லீக் போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இலங்கை - ஹாங்காங் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்தது. ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ராத் நிதானமாக ஆடினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் பிறகு வந்த பாபர் ஹயாத் 4 ரன்களுடன் வெளியேறினார். 3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்த நிலையில் நூலிழையில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அதேசமயம் எதிர் முனையில் நிசாகத் கான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது. முடிவில் ஹாங்காய் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் ஆடிய துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு மரண பயத்தை ஹாங்காய் காட்டியதால், அந்த அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத்தடுமாறி விளையாடியது. ஆனாலும் கடைசி நேரத்தில் ஹாங்காங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றியைப் பெற்றது.
இலங்கையின் பதற்றமான இந்த வெற்றிக்கு தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்கவின் தொடர்ச்சியான இரண்டாவது அரை சதமும், வனிந்து ஹசரங்காவின் 20 ரன்களும் முக்கிய காரணமாக அமைந்தது. ஹாங்காங்கின் 149/4 என்கிற ஸ்கோரை தொடர்ந்து, இலங்கை அணி 7 பந்துகள் மீதமுள்ள நிலையில் 153/6 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, இந்த தொடரின் 7 ஆவது லீக் போட்டி துபாயில் உள்ள அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் ஐக்கிய அமீரகம்-ஓமன் அணிகள் விளையாடின. முடிவில் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த (செப்டம்பர் 9) தொடங்கி வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த கிரிக்கெட் தொடர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகள் உள்ளன. பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் உள்ளன.
லீக் சுற்று, சூப்பர் ஃபோர் சுற்று மற்றும் இறுதி சுற்று என 3 கட்டங்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிச் சுற்று போட்டிக்குத் தேர்வு செய்யப்படும்.

