சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சாய் சுதர்சன், 30 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் , பவுலிங் தேர்வு செய்தது. குஜராத் அணியின் கேப்டன் 2 ரனக்ளில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய பட்லர், சாய் சுதர்சனுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார்.
இந்நிலையில் பட்லர் 36 ரன்கள் எடுத்த போது, தீக்ஷனா பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். பின்னர் வந்த ஷாருக்கான் பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய நிலையில், அவரும் 36 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த ரூதர்போர்டு வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து, அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் சாய் சுதர்சன் நிலைத்து நின்று விளையாடி 82 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது.
பின்னர் ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. ஜெய்ஸ்வால் (6), ராணா (1) ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகினர். பின்னர் வந்த ரியான் பராக் சிக்சர்களாக அடித்த நிலையில் 26 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தது. இந்த நேரத்தில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேப்டன் சாம்சன் 41 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி வரை தனி ஆளாக போராடிய ஹெட்மயர், 52 ரன்களுக்கு அவுட்டான நிலையில், ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சாய் சுதர்சன் சாதனைகள்: குஜராத் அணிக்கு நம்பிக்கையாக திகழும் சாய் சுதர்சன், இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் 82 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சாய் சுதர்சன் நேற்று அரைசதம் அடித்ததோடு சேர்த்து இந்த சீசனில் மட்டும் 5 அரைசதங்கள் அடித்துள்ளார்.
மேலும் ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் மற்றும் இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். சாய் சுதர்சன் அகமதாபாத் மைதானத்தில் மட்டும் பெங்களூரு அணிக்கு எதிராக 84, சென்னை அணிக்கு எதிராக 103, பஞ்சாப் அணிக்கு எதிராக 74, மும்பை அணிக்கு எதிராக 63, ராஜஸ்தான் அணிக்கு எதிராக 82 ரன்கள் அடித்துள்ளார். முன்னதாக ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூரு மைதானத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். டி வில்லியர்ஸ் பெங்களூரு மைதானத்தில் 2018 மற்றும் 2019 சீசனில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த பிரியான்ஸ் ஆர்யா; ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனைகள் பட்டியல்!
மேலும் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடர்களில் 30 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இதுவரை சாய் சுதர்சன் 1 சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 1307 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஷான் மார்ஷ் 1338 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2024 சீசனில் 527 ரன்கள் குவித்த சாய் சுதர்சன், இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் 265 ரன்கள் குவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.