அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 23 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தீர்மானித்தது.
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஷுப்மான் கில் களமிறங்கினர். சாய் சுதர்சன் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மறுபக்கம் ஜோஃப்ரா ஆர்ச்சர் அசுர வேகத்தில் பந்து வீசி எதிரணியினரை அச்சுறுத்தி வந்த நிலையில் மூன்றாவது ஓவரில் ஷுப்மான் கில் கிளீன் போல்டாகி 3 பந்துகளுக்கு 2 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். பின்னர் அவரும் 10 ஆவது ஓவரில் மகேஷ் தீக்ஷனா பந்தில் எல்பிடபிள்யு ஆகி 25 பந்துகளுக்கு 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாருக் கான் இறங்கினார். தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அரை சதம் விளாசி களத்தில் நின்றார். 13 ஆவது ஓவருக்கு குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 15 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது. சாய் சுதர்சன் பவுண்டரிகளை விளாசி ராஜஸ்தான் பவுலர்களுக்கு தலை வலியை கொடுத்து வந்தார். மேலும், இரண்டு முறை ரன் அவுட்களில் இருந்து தப்பித்த சாய் சுதர்சன் 16 ஓவர் முடிவில் 46 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார்.
இதே ஓவரில் ஷாருக் கான் ஸ்டம்ப்பிங் ஆகி 20 பந்துகளிள் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷெர்பேன் ரூதர்போர்ட் சந்தீப் சர்மா வீசிய 17 ஆவது ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 19 ஆவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 53 பந்துகளில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரஷித் கான் வந்த உடனே சிக்ஸர், பவுண்டரி விளாசி அதிர வைத்தார். பின்னர் 19 ஓவர் முடிவில் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் ராகுல் திவாதியா சிக்ஸர், பவுண்டரி விளாசிய நிலையில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் சேசிங்
218 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் அர்ஷத் கான் வீசிய பந்தில் 6 ரன்களில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து நிதிஷ் ராணா இறங்கினார். இவரும் வந்த வேகத்திலேயே அடுத்த ஓவரில் முகமது சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரியான் பராக் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். தொடக்கத்தில் இருந்தே சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்து வந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்தது. 7 ஆவது ஓவரில் ரியான் பராக் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 14 பந்துகளுக்கு 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து துருவ் ஜூரல் களத்துக்கு வந்தார். ரஷித் கான் வீசிய 8 ஆவது ஓவரில் துருவ் ஜூரல் 5 ரன்களில் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஷிம்ரன் ஹெட்மயர் இறங்கினார். ராஜஸ்தான் அணி 11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்தது. தொடக்க முதலே சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் பிரசித் கிருஷ்ணா வீசிய 13 ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து 28 பந்துகளுக்கு 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களத்துக்கு வந்த ஷுபம் துபே ரஷித் கான் வீசிய 14 ஆவது ஓவரில் எல்பிடபிள்யு ஆகி ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் வந்தார். சாய் கிஷோர் வீசிய 15 ஆவது ஓவரில் ஷிம்ரன் ஹெட்மயர் கேட்சை தவறவிட்டனர். இதனை அடுத்து அதே ஓவரில் ஷிம்ரன் ஹெட்மயர் சிக்ஸர் விளாசினார்.
15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 எடுத்திருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி பெற 30 பந்துகளுக்கு 79 ரன்கள் தேவை. ஷிம்ரன் ஹெட்மயர் 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 16 ஆவது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளுக்கு 52 ரன்களில் ஆட்டமிழந்தார். களத்தில் மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே இருந்தனர். சாய் கிஷோர் வீசிய 17 ஆவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே 3 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், ராஜஸ்தான் அணி 150 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. சந்தீப் சர்மா, மகேஷ் தீக்ஷனா களத்தில் இருந்து முடிந்த வரை ஆடிக்கொண்டிருந்தனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களில் சுருண்டது.
இதனால் குஜராத் அணி 58 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், குஜராத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
குஜராத் அணியில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். ரஷித் கான், சாய் கிஷோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
