மும்பை: சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன அபிஷேக் சர்மா, ஹெட் ஜோடி பொறுமையாக ரன்கள் சேர்த்தது. மும்பை அணியின் பீல்டிங்கில் ரன்களை கட்டுப்படுத்தினர்.
சன்ரைசர்ஸ் 59 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அபிஷேக் ஷர்மா 40 ரன்களுக்கு அவுட்டானார். பார்ம் அவுட் ஆன இஷன் கிஷன் 2 ரன்களுக்கு நடையை கட்டினார். பின்னர் டிராவிஸ் ஹெட் 28 ரன்களுக்கு வில் ஜேக்ஸ் பந்தில் அவுட்டானார். இறுதியில் கிளாசென் (37) ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியில் அபாரமாக பந்துவீசிய வில் ஜேக்ஸ் 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா சிக்சர்களாக விளாசி வாணவேடிக்கை காண்பித்தார். ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்த நிலையில், கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். பின்னர் வந்த வில் ஜேக்ஸ் ரிக்கெல்டனுடன் சேர்ந்து வேகமாக ரன்கள் சேர்த்தனர்.
ஒரு பக்கம் ரிக்கெல்டன் பொறுமையாக ரன்கள் சேர்த்த நிலையில், வில் ஜேக்ஸ் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி ரன் ரேட் குறையாமல் பார்த்து கொண்டார். பின்னர் ரிக்கெல்டன் (31), வில் ஜேக்ஸ் (36) ஆகியோர் அவுட்டான நிலையில், கடைசி நேரத்தில் திலக் வர்மா (21*), பாண்டியா (21) களமிறங்கி சிக்சர்களாக அடித்து மும்பை அணியை வெற்றி பெறச் செய்தனர்.
மும்பை இந்தியன்ஸ் சாதனை: நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒரே மைதானத்தில் சேஸிங் செய்து அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் 47 போட்டிகளில் சேஸிங் செய்த போது 29 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாவது ரன் ஓடாததால் சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ராஜஸ்தான் அணிக்கு வில்லனான துருவ் ஜுரேல்?
இதனைத்தொடர்ந்து இந்த சாதனை பட்டியலில் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 40 போட்டிகளில் சேஸிங் செய்த போது 28 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் 31 போட்டிகளில் சேஸிங் செய்து 24இல் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 31 போட்டிகளில் 20இல் வென்றுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.