சென்னை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கம்பேக் கொடுத்துள்ளது. 18வது ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
மும்பை அணிக்கு ரிகெல்டன் அதிரடியாக தொடக்கத்தை வழங்கினார். ஸ்டார்க், முகேஷ் குமார் பந்துகளில் பவுண்டரி, சிக்சராக விளாசினார். மறுபக்கம் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சற்று வேகமெடுத்த நிலையில், 18 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ரிக்கெல்டன், குல்தீப் யாதவ் பந்தில் 41 ரன்களுக்கு போல்டானார். இதனைத்தொடர்ந்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை கையில் எடுத்தனர். அவ்வப்போது சிக்சர், பவுண்டரிகளாக அடித்து ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். திலக் வர்மாவின் கேட்ச்சை மும்பை பீல்டர்கள் தவறவிட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் வந்த வேகத்தில் ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கு நடையை கட்டினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் திலக் வர்மா நிலைத்து நின்று விளையாடி அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் 59 ரன்களுக்கு திலக் வர்மா அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடரின் ஆரம்பம் முதல் பார்மில் இல்லாத பிரேசர் மெக்கர்க் முதல் பந்திலேயே வில் ஜேக்ஸ்க்கு கையில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.
பின்னர் இம்பேக்ட் பிளேயராக கருண் நாயர் களமிறங்கினார். அபிஷேக் பொரேல் ஒரு பக்கம் பொறுமையாக ஆடிய நிலையில், கருண் நாயர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பும்ராவின் முதல் ஓவரில் 11 ரன்கள் விளாசினார். மற்ற மும்பை பவுலர்களின் பந்துகளையும் விடாமல் விளாசிய கருண் நாயர், 6வது ஓவரில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் பொரேல் 33 ரன்களுக்கு அவுட்டானார்.
அதனைத்தொடர்ந்து சதத்தை நெருங்கி கொண்டிருந்த கருண் நாயர் சாண்ட்னரின் சூப்பர் பந்தில் 89 ரன்களுக்கு போல்டானார். இது டெல்லிக்கு பேரிழப்பாக அமைந்தது. அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல் (9), ஸ்டப்ஸ் (1) ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.எல்.ராகுல் 15 ரன்களுக்கு கரண் சர்மா பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களுக்கு அவுட்டாக போட்டி மும்பை பக்கம் திரும்பியது.
இதையும் படிங்க: கோலி, சால்ட் அபாரம்: ராஜஸ்தானை அசால்ட்டாக ஜெயித்த பெங்களூரு!
விப்ராஜ் நிகம் வந்த வேகத்தில் அதிரடி காட்டி 14 ரன்களுக்கு அவுட்டான நிலையில், கடைசி ஓவரில் அஷுதோஷ் சர்மா அதிரடி காட்டுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் மும்பை அணியின் அபார பீல்டிங்கில் 17 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அதேபோல் அடுத்த பந்திலும் குல்தீப் யாதவ் இரண்டாவது ரன் ஓட ஆசைப்பட்டு, ரன் அவுட்டானார். பின்னர் மோகித் சர்மாவை சாண்ட்னர் ரன் அவுட்டாக்க டெல்லி அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணியின் அபார பீல்டிங்கில் கடைசி மூன்று பந்தில், மூன்று ரன் அவுட் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி இத்தொடரில் முதல் தோல்வியை தழுவிய நிலையில், மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்