சென்னை: நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் எம்.எஸ். தோனி கேப்டனாக இந்த தொடரில் அணியை வழி நடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பாயிண்ட்ஸ் டேபிளில் சென்னை அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கேப்டனாக சென்னை அணியை வழிநடத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அணிக்கு முக்கிய பலமாக இருந்து வந்தார். இந்த நிலையில், குவஹாத்தியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது.
இருப்பினும், கடைசியாக நடந்த பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 11) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதுகிறது. இதற்கிடையே, சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். முழங்கை காயத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியில் பங்கேற்ற நிலையில் ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் நடந்து வரும் சீசனில் இருந்து முழுவதுமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் சென்னைக்கு அணிக்கு கேப்டனாக தோனி செயல்படவுள்ளார். இந்த தகவலை சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 269 ஐபிஎல் போட்டிகளில் 150 கேட்ச்கள் பிடித்து அசத்தல்; தோனி வரலாற்று சாதனை!
நடப்பு சீசனின் தொடக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த பிறகு அணியை மொத்தமாக வழி நடத்துவதில் இருந்து தோனி பின்வாங்கினார். இருப்பினும், விக்கெட் கீப்பராக அதே உத்வேகத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதி போட்டிக்கு பிறகு மீண்டும் கேப்டன் பொறுப்புக்கு தற்போது திரும்பியுள்ளார் தோனி.
சென்னை அணி இந்த சீசனில் சுமாராக ஆடி வரும் நிலையில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பங்கு ஆறுதலாக இருந்தது. தற்போது சென்னை அணிக்கு அவர் இல்லாத இடத்தை ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நிரப்ப வேண்டும்.
தோனி இதுவரை 235 போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், அவரது தலைமையில் சிஎஸ்கே ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்