சென்னை: தோனி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டம்பிங் செய்தது மூலம் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்துள்ளார். 18வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று லக்னோவில் நடைபெற்ற 30வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இன்னிங்ஸ் ஆரம்பம் முதல் சென்னை அணி கட்டுக்கோப்பாக பந்து வீசியது. மார்க்ரம், கலீல் அகமது பந்தில் 6 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் சென்னை அணிக்கு மிகவும் அபாயமான பேட்ஸ்மேன் என கருதப்பட்ட பூரன் 8 ரன்களுக்கு கம்போஜ் பந்தில் அவுட்டானார். மார்ஷ் 30 ரன்களுக்கு அவுட்டாக லக்னோ பேட்டிங்ஹ் திணறத் தொடங்கியது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் பண்ட் 63, மறுமுனையில் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தார். அவருக்கு பதோனி 22, சமாத் 20 ஆகியோர் துணையாக நின்று ரன்கள் சேர்த்தனர். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 166 ரன்கள் எடுத்தது.
பின்னர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு புதிய வீரராக களமிறங்கிய ஷேக் ரஷித், ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கம் அளித்தனர். இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன் கணக்கை உயர்த்தினர். இந்த நேரத்தில் பந்துவீச வந்த மார்க்ரம் 37 ரன்களுக்கு ரவீந்திராவை அவுட்டாக்கினார். பின்னர் அவேஷ் கான் பந்தில் 27 ரன்களுக்கு ஷேக் ரஷித் அவுட்டானார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7 ரன்களுக்கு அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபே நிலைத்து நின்று ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் ஷங்கர் 9 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய தோனி அதிரடியாக நின்று 26 ரன்கள் எடுத்தார். சென்னை அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: கம் பேக் கொடுத்த சிஎஸ்கே... லக்னோவிடம் போராடி வெற்றி! மீண்டும் ஃபினிஷர் ரோல் எடுத்த தோனி!
தோனி சாதனை: இந்த போட்டியில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்ததன் முலம் ஐபிஎல் தொடரில் தோனி 200 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்துள்ளார். ஜடேஜா பந்தில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, இறங்கிய போது தோனி ஸ்டம்பிங் செய்தார். பின்னர் ரிஷப் பண்ட், கொடுத்த கேட்சை தோனி பிடித்தார். மேலும் பதிரனா பந்தில் பவுலிங் திசையில் ரன் ஓட முயன்ற போது, ரன் அவுட் செய்தார். தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 270 போட்டிகளில் 201 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர்கள் பட்டியலில் தோனி (201) முதலிடத்திலும், டி வில்லியர்ஸ் (126) இரண்டாவது இடத்திலும், ராபின் உத்தப்பா (124) மூன்றாவது இடத்திலும், சாஹா (118) நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்