லக்னோ: 2025 ஐபிஎல் சீசனின் 26 ஆவது போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
முதலில் களம் இறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 7 ஃபோர்கள், ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டி 37 பந்துகளில் 56ரன்கள் குவித்த நிலையில் ரவி பிஷோனி பந்தில் பூரானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சுப்மான் கில், 6 ஃபோர்கள், ஒரு சிக்ஸர் என 38 பந்துகளில் 60 ரன்களை குவித்து அணியை வலுவாக நிறுத்திய நிலையில் அவெஸ்கான் பந்தில் மார்க்ராமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் மிக நிதானமாக ஆடி 14 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் திக்வேஸ் ரதியின் பந்தில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருக்கு அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் வெறும் 2 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஆட வந்த ஷெர்ஃபேனே ரூதர்ஃபோர்டு 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் தாக்கூர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்கு அடுத்து வந்த ஷாரூக்கான் 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த ராகுல் தெவாத்தியா முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்து வந்த ரஷித் கான் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து குஜராத் அணி 180 ரன்களை எடுத்திருந்தது. லக்னோ அணியின் தாக்கூர், ரவி பிஷோனி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: தல வந்தும் தலைவிதி மாறலயே! சொந்த மண்ணில் சொதப்பிய சிஎஸ்கே!
இதன் பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. ஐடன் மார்க்ராம் 9 ஃபோர்கள், ஒரு சிக்ஸர் என 31 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலயில் பிராசித் பந்தில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய ரிஷப் பந்த் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராசித் பந்தில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக களம் இறங்கிய நிக்கோலஸ் பூரான் ஒரு ஃபோர், 7 சிக்ஸர்கள் என 34 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் கான் வீசிய பந்தில் ஷாருக் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஆயுஷ் படோனி 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 7 ரன்கள் எடு்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த அப்துல் சமது 2 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாக அதாவது 19.3 ஓவர்களிலேயே 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்