லக்னோ: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் 61ஆவது போட்டி லக்னோ-ஹைதராபாத் இடையே லக்னோவில் வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீசத் தீர்மானித்தது. லக்னோ அணி பேட்டிங்கில் இறங்கியது. முதலில் களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 ஃபோர்கள் உட்பட 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த மார்க்ராமும் நிதானமாக ஆடி 4 சிக்ஸர்கள், 4 ஃபோர்கள் என 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்ற நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட் ஆனார். மூன்றாவதாக களம் இறங்கிய பான்ட் 6 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வந்த வேகத்தில் திரும்பினார்.
நான்காவதாக களம் இறங்கிய பூரான் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஸான் பந்தில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக 5 ஆவதாக வந்த ஆயுஷ் படோனி 3 ரன்களிலும், 6ஆவதாக ஆட வந்த அப்துல் சமத் 3 ரன்களோடும் , 7ஆவதாக களம் இறங்கிய தாக்கூர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
8ஆவது வீரராக களம் இறங்கிய ரவி பிஷ்னோய் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. 9 ஆவதாக ஆட வந்த ஆகாஷ் தீப் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 205 ரன்களை லக்னோ அணி எடுத்தது.
ஹர்ஷல் படேல் சாதனை
ஹைதராபாத் அணியின் வேகபந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல், இன்றைய பந்து வீச்சில் லக்னோ அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்களை வீழ்த்தி அதிவேக இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதையும் படிங்க: சாய் சுதர்சன், சுப்மன் கில் டக்கர் ஆட்டம்.. டெல்லியை வீழ்த்தி பிளே ஆப்ஃக்கு நுழைந்த குஜராத்!
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அதர்வ தைடே 13 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த அபிஷேக் சர்மா 6 சிக்ஸர்கள், 4 ஃபோர்களுடன் 20 பந்துகளில் அதிரடியாக 59 ரன்களை குவித்த நிலையில் திக்வேஷ் ரதி பந்தில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மூன்றாவதாக களம் இறங்கிய இஷான் கிஸான் 28 பந்துகளில் 35 ரன்களை எடுத்து திக்வேஷ் ரதி பந்தில் அவுட் ஆனார். நான்காவதாக விளையாட வந்த ஹென்ரிச் கிளாசென் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாக்கூர் பந்தில் அவுட் ஆனார்.
5 ஆவதாக ஆட வந்த கமிந்து மெண்டிஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தை அவர் தொடரவில்லை. 6 ஆவதாக களம் இறங்கிய அனிகேத் வர்மா 5 ரன்கள் எடுத்திருந்தார். 7 ஆவதாக ஆட வந்த நிதிஷ் குமார் ரெட்டி 5 ரன்கள் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு முன்பே ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 206 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.