குவஹாத்தி: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. குவஹாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று(மார்ச் 26) நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக பந்து வீசினர்.
இதன் விளைவாக, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் அதிரடியாக ஆடுவதற்கு பதிலாக, நிதானமாக ஆடி ரன் சேர்க்க வேண்டியதானது. அவர்களின் நிதானமான ஆட்டமும் பெரிதாக எடுபடவில்லை. ஜெய்ஸ்வால் 29 (24 பந்துகளில்) ரன்களுக்கும், சாம்சன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரியான் பராக் சற்று பொறுப்புடன் ஆடி 25 ரன்களை சேர்த்தார். இவருக்கு அடுத்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் மட்டும் சற்று சொல்லிக் கொள்ளும்படி 33 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆட்ட நேர முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இந்த அணியின் ஒரு வீரர் கூட அரை சதம் அடிக்கவில்லை என்பதால் கொல்கத்தா அணிக்கு பெரிய எண்ணிக்கையிலான ரன்னை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணியால் நிர்ணயிக்க இயலவில்லை.
கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 17 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை போன்றே மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான குவின்டன் டி காக் அதிரடியாக ஆடி 61 பந்துகளில் 97 ரன்களை குவித்ததுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: சென்னை, பெங்களூரு போட்டியை காண இலவச பயணம் - சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு!
அவர் விளாசிய ரன்களில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். டிகாக்கிற்கு பக்கபலமாக ரகுவம்சி 22 ரன்கள் எடுத்து அவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் பயனாக, கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை எளிதாக வென்றது.