சண்டிகர்: ஐபிஎல் சீசன் 2025ல் சண்டிகரில் இன்று நடந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2025ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனின் 31 ஆவது போட்டி பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையே சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. களத்தில் இறங்கி அடித்து விளையாட தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரியான்ஸ் ஆர்யா, ஆரம்பத்தில் ஒரு சிக்ஸர், 3 ஃபோர்கள் என அதிரடி காட்டினார். எனினும் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ரானாவின் பந்தில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பிரப்சிம்ரன், 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மூன்றாவதாக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்கூட எடுக்காமல் அவுட் ஆனார்.
நான்காவதாக களம் இறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 6 பந்துகளில் இரண்டே இரண்டு ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். ஐந்தாவதாக களம் இறங்கிய நேஹல் வதேரா, 6ஆவதாக களம் இறங்கிய மேக்ஸ்வெல், 7ஆவதாக களம் இறங்கிய சூர்யான்ஷ் ஷேட்ஜ், 8ஆவதாக களம் இறங்கிய ஷாஷங் சிங், 9ஆவதாக களம் இறங்கிய மார்க்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட் ஆகியோர் முறையே 10, 7 , 4, 18, 1 , 11 ஆகிய சொற்ப ரன்களை எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 11ஆவது வீரராக களம் இறங்கிய அர்ஷ்தீப் சிங் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாக 15.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்கள் எடுத்திருந்தது. கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்களை கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, நரைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய நம்பிக்கை - யார் இந்த 20 வயது ஷேக் ரஷீத்?
112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குயின்டன் டி காக் 2 ரன்களிலும், அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய சுனில் நரைன் 5 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். மூன்றாவதாக களம் இறங்கிய அஜிங்க்யா ரஹானே 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நான்காவதாக ஆட வந்த அங்க்கிரிஸ் ரகுவன்சி 5 ஃபோர்கள், ஒரு சிக்ஸர் என ஓரளவுக்கு சுமாராக ஆடி 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
ஐந்தாவதாக களம் இறங்கிய வெங்கடேஷ் அய்யர், 6ஆவதாக களம் இறங்கிய ரிங்கு சிங் ஆகியோர் முறையே 7 , 2 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 7ஆவதாக களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் எடுத்திருந்தார். 8ஆவதாக களம் இறங்கிய ராமன்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். 9 ஆவதாக களம் இறங்கிய ஹர்ஷித் ரானா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். 10 ஆவதாக களம் இறங்கிய வைபவர் அரோரா ஒரு ரன்கூட எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்ததாக களம் இறங்கிய அன்ரிச் நார்ட்ஜே ரன் ஏதும் எடுக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாக 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களை மட்டுமே கொல்கத்தா அணியால் எடுக்க முடிந்தது. எனவே 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.