பெங்களூரு: 18-ஆவது ஐபிஎல் கோப்பையை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தட்டிச் சென்றது. இதன் வெளிப்பாடாக பெங்களூரு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆராவாரமிட்டு வெற்றி முழக்கங்களை எழுப்பினர்.
நேற்றைய இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இரண்டு அணிகளும் கோப்பை வேட்கை கொண்டு 18 வருடங்களாக போராடி வந்தன. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அவர்களின் கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்ததாகவே பார்க்கப்பட்டிருக்கும்.
இதற்கிடையே, பெங்களூரு அணி ரசிகர்கள் ‘இ சாலா கப் நம்தே’ என்ற வாசகங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு ஆர்ப்பரித்தனர். இவற்றுக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
பெங்களூரு அணி மொத்தம் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, 35 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். பஞ்சாப் பவுலிங்கை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்ததாக, 191 ரன்கள் எடுத்தால் வெற்றிக் கனியை சுவைத்து விடலாம் என பஞ்சாப் அணி மைதானத்தில் கால் பதித்தது. நிதானமாக ஆடிய அந்த அணி வீரர்கள், அதிரடியாக ரன்கள் சேர்க்க தவறினர். இதனால் ஒவ்வொரு விக்கெட் இழப்புக்கு பிறகும், அடுத்த வந்த வீரர்கள் மீது பெரிய அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது.
குறிப்பாக, அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து செல்லும் முக்கிய நபராக பார்க்கப்பட்ட பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் ஒரு ரன் எடுத்து வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. முடிவில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி வாகை சூடியது.
போட்டி முடியும் கடைசி நேரத்தில், கேமராக்கள் அனைத்தும் விராட் கோலி பக்கம் திரும்ப, ரசிகர்கள் ‘இ சாலா கப் நம்தே’ என்று ஆர்ப்பரித்தனர். 18 வருடங்களாக பெங்களூரு அணிக்காக கோலி விளையாடி வருவதால், இந்த முறையாவது அந்த அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வேண்டுதலுடன் காத்திருந்தனர்.
இறுதியாக கோலி கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் சொட்ட, வெற்றி கனியை ருசித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. மைதானத்தில் கோலி ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட்டங்களை நிகழ்த்திய நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் களித்தது. ஆர்.சி.பி கொடியை அசைத்தும், பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க |
நகரின் பிரதான பகுதிகளான இந்திரா நகர், கோரமங்கலா, மகாத்மா காந்தி சாலை, சர்ச் ஸ்டிரீட் போன்ற இடங்களில் இசைகள் ஒலிக்கப்பட்டு, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பெரும்பாலான இடங்களில் ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி நேரலையில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசியல் தலைவர்களும் ஆர்.சி.பி ரசிகர்களுடன் வெற்றி முழக்கத்தை பகிர்ந்துகொண்டனர்.
“விராட் கோலியின் 18 வருட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது; இ சாலா கப் நம்தே” என்று ஒருபக்கம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் பதிவிட, ‘18 வருட காத்திருப்புக்கு பரிசளித்த ஆர்.சி.பி அணிக்கு நன்றி’ என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மறுபுறம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், விராட் கோலிக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்