ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நிதானமாக ஆடிய கேப்டன் ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் செஞ்சுரி அடித்து அசத்தினர்.
சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின் இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். அதுவும் வெளிநாட்டில் விளையாடுவதால் இளம் வீரர்களுக்கு சவால் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. எனவே, இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
முதலில் களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் நிதானமாக ஆடினார். 159 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்களை எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த ராகுல் 78 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மூன்றாவதாக களம் இறங்கிய சாய் சுதர்சன் நான்கு பந்துகளில் ஒரு ரன்கூட எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நான்காவதாக வந்த கேப்டன் சுப்மான் கில் நிதானமாக ஆடி 175 பந்துகளில் 127 ரன்கள் எடுத்திருந்தார். 5 ஆவதாக களம் இறங்கிய ரிஷப் பந்த் மிக நிதானமாக ஆடி வருகிறார். 102 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா சற்று முன்னர் வரை முதல் இன்னிங்க்ஸில் 85 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 359 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முதலாவது தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கோப்பையின் அறிமுக விழா நேற்று நடைபெற்ற போது, சச்சின் டெண்டுல்கர், மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பட்டோடியை கௌரவிக்கும் விதமாக அவரது பெயரில் இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் அணியின் கேப்டனுக்கு பதக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லே மைதானத்தில் இந்தியா அணி இதுவரை 7 டெஸ்டில் விளையாடியுள்ள நிலையில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 1986இல் கபில் தேவ் தலைமையில் ஒரு போட்டியும், 2002இல் கங்குலி தலைமையில் ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் ஜூலை 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பர்மிங்காமில் நடைபெறுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்