ஹைதாராபாத்: இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முன்னணியில் உள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், பண்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 465 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 96 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 364 ரன்களை எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரராக ஜாக் கிராலி களம் இறங்கினார். நிதானமாக ஆடி 126 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். அடுத்து வந்த பென் டக்கெட் செஞ்சுரியை கடந்து 149ரன்கள் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இதையும் படிங்க: ஒரு டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த பண்ட்! சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் முறியடிப்பு!
மூன்றாவதாக களம் இறங்கிய ஓலி போப் வெறும் 8 ரன்களில் பிராசித் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் 53 ரன்கள் எடுத்திருந்தார். 5ஆவதாக களம் இறங்கிய ஹாரி புரூக் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் திரும்பினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 33 ரன்கள் எடுத்து ரவிந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
அவருக்கு அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 44 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 373 ரன்கள் எடுத்தது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் இளம் வீரர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் சுறுசுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் கடைசி நாளன்று இங்கிலாந்தின் ரன்குவிப்பை தடுக்க தவறி விட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.