புகரெஸ்ட்: ருமேனியாவில் நடைபெற்று வந்த சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடர் ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, டி.குகேஷ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை பிரக்ஞானந்தா வெளிப்படுத்தி வந்தார். இந்த தொடரில் அலிரேசா ஃபிரூஸ்ஜா மற்றும் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த மூன்று வீரர்களும் ஒன்பது சுற்றுகளுக்குப் பிறகு 5.5 புள்ளிகளுடன் பிரதான போட்டியை முடித்திருந்தனர். இதனால் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கர்களில் வச்சியர்-லக்ரேவ் மற்றும் அலிரேசா ஃபிரூஸ்ஜாவுடன் பிரக்ஞானந்தா மோதினார். பிரக்ஞானந்தா vs ஃபிரூஸ்ஜா மற்றும் வச்சியர்-லக்ரேவ் vs ஃபிரூஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இதையும் படிங்க: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி... மீண்டும் அணிக்கு திரும்பும் 6 வெளிநாட்டு வீரர்கள்! |
இதனையடுத்து நடைபெற்ற இறுதி சுற்றில் வச்சியர்-லக்ரேவை தோற்கடித்து பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பிரக்ஞானந்தா இந்த தொடரில் ஒன்பது ஆட்டங்களில் 7 ஆட்டங்களை டிரா செய்தார். டை பிரேக்கரில் கூடுதல் கவனம் செலுத்தியதால் அவரால் கோப்பையை வெல்ல முடிந்துள்ளது. கோப்பையை வென்ற அவருக்கு ரூ.66 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்த தொடரில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.குகேஷ், ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தை டிரா செய்த பிறகு, 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். டி.குகேஷ்க்கு ரூ.14 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இந்த ஆண்டில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன் பட்டத்தை வென்று ஆச்சரியம் அளித்தார். அதிலும், உலக சாம்பியன் குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். தற்போது சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரிலும் அவர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.