டெல்லி: ஐபிஎல் 2025 தொடரின் 60 ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே இன்று (மே 18) நடந்தது. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
டெல்லி பேட்டிங்
டெல்லி அணிக்காக முதலில் ஃபாஃப் டு பிளெசிஸ், கே.எல். ராகுல் ஓப்பனிங்கில் களமிறங்கினர். 3 ஓவர் முடிவில் டெல்லி அணி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த ஓவரில் ஃபாஃப் டு பிளெசிஸ் 5 ரன்களுக்கு கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் போரல் வந்தார். கே.எல். ராகுல், அபிஷேக் போரல் கூட்டணி அதிரடியாக ஆடி வலுவான அடித்தளத்தை அமைத்தது. கே. எல். ராகுல் சரவெடியாக பவுண்டரிகளை விளாசி குஜராத் பவுலர்களை தடுமாற வைத்தார். 10 ஓவர் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எடுத்து இருந்தது.
கே.எல். ராகுல் 35 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 12 ஆவது ஓவரில் அபிஷேக் போரல் 19 பந்துகளுக்கு 30 ரன்களில் (3 சிக்ஸர், 1 பவுண்டரி ) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல் 16 பந்துகளுக்கு 25 ரன்களில் வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ராகுலுடன் இணைந்து ஓரிரு ரன்களை எடுத்து கொடுத்தார். ஓப்பனிங்கில் இறங்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல். ராகுல் 19 ஆவது ஓவரில் 60 பந்துகளுக்கு சதத்தை பதிவு செய்து மிரட்டினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் அடித்து குஜராத்துக்கு 200 ரன்கள் இலக்கு வைத்தது. நாட் அவுட் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் 65 பந்துகளுக்கு 112 ரன்கள் (4 சிக்ஸர், 14 பவுண்டரி) எடுத்து இருந்தார்.
குஜாரத் பேட்டிங்
குஜாரத் அணிக்கு சுப்மன் கில், சாய் சுதர்சன் ஓப்பனிங் இறங்கினர். தொடக்கம் முதலே இந்த கூட்டணி யோசிக்காமல் பந்துகளை பவுண்டரிக்கு விளாச தொடங்கியது. பவர்பிளேவை கட்சிதமாக பயன்படுத்தி கேப்களை நோக்கி பந்துகளை பறக்கவிட்டனர். இதனால் 6 ஓவர் முடிவில் 59 ரன்கள் சேர்ந்தது. வேக பந்து வீச்சாளர் நடராஜன் ஓவரும் டெல்லி அணிக்கு கைகொடுக்கவில்லை. அனைத்து பவுலர்களையும் சுப்மன் கில், சாய் சுதர்சன் கூட்டணி நின்று விளையாடி விறுவிறுப்பாக ரன்களை உயர்த்தியது. 9 ஆவது ஓவரில் சாய் சுதர்சன் 30 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 12 ஆவது ஓவரில் சுப்மன் கில் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 10 ஓவர் முடிவில் குஜராத் அணி பூஜ்யம் விக்கெட் இழப்புக்கு 93 ரன்களை சேர்த்தது. குஜராத் அணிக்கு 15 ஆவது ஓவரில் 34 பந்துகளுக்கு 50 ரன்கள் தேவை.
அடுத்த 5 ஓவருக்கு 38 ரன்கள் தேவைப்பட 16 ஆவது ஓவரில் சிங்கிள்ஸ் மட்டுமே எடுத்து வந்தனர். 18 ஆவது ஓவரில் சாய் சுதர்சன் 56 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதே ஓவரில் இலக்கையும் எட்டி குஜராத் அணி 19 ஓவர்களில் பூஜ்யம் விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப்ஃக்கு தகுதி பெற்றது. விக்கெட்டை இழக்காமல் சாய் சுதர்சன் 61 பந்துகளுக்கு 108 ரன்களும், சுப்மன் கில் 53 பந்துகளுக்கு 93 ரன்களும் எடுத்து இருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.