ஹைதராபாத்: ஆசியக் கோப்பை தொடரிலிருந்து இந்தியா விலகியுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் எல்லை பதற்றம் காரணமாக அனைத்து ஆசியக் கோப்பை தொடர்களிலிருந்து நிரந்தரமாக இந்தியா விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவலை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சய்கியா மறுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் பேசுகையில், "இன்று காலை முதல் ஊடகங்களில் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களிலிருந்து விலகுவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை ACC (asian cricket council) நடத்தி வருகிறது. பிசிசிஐ ஆசியக் கோப்பை குறித்து எந்தவித ஆலோசனைகளிலும் ஈடுபடவில்லை. தற்போது எங்களது முழு கவனம் ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் தான் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பெண்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்தியா அணி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக உள்ள மொசின் நாக்வி, ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ளார். இதன் காரணமாக இந்தியா விலகியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆண்கள் ஆசியக் கோப்பை தொடரை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இத்தொடரில் விளையாடுமா என்பது கேள்விக்குள்ளான நிலையில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவில்லை என்றால் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கிடைக்கும் 15 சதவீத லாபத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: சாய் சுதர்சன், சுப்மன் கில் டக்கர் ஆட்டம்.. டெல்லியை வீழ்த்தி பிளே ஆப்ஃக்கு நுழைந்த குஜராத்!
கடந்த ஆசியக் கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில், இந்தியா தனது போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் விளையாடியது. அதேபோல் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில், இந்தியா விளையாடிய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற்றன. இம்முறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.