மும்பை: 2025 ஐபிஎல் சீசனில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி கடைசி வரை போராடி ரன்களில் தோல்வியைத் தழுவியது. 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீசத்தீர்மானித்தது. இதையடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட், வெறும் நான்கு ரன்களே எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
கோலியின் சாதனை: அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கோலி 42 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 8 ஃபோர்கள், 2 சிக்ஸர்களை அடித்தும் கோலி அசத்தினார். இவர் ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்தில் நமன் திரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். எனினும் அவரது ரன் குவிப்பு அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்தியர் என்ற வரலாற்று மைல்கல்லை விராட் கோலி எட்டினார்.
இதையும் படிங்க: சிராஜ் வேகத்தில் சிதறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
மூன்றாவதாக களம் இறங்கிய படிக்கல் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்னேஷ் புதூர் வீசிய பந்தில் வில் ஜேக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு அடுத்து களம் இறங்கிய ரஜத் படிதார் 32 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். 5 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள் என அவர் விரைவாக ரன்களை குவித்து அணியின் ரன்களை உயர்த்திய நிலையில் போல்ட் வீசிய பந்தில், ரிக்கல்டனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருக்கு அடுத்து களம் இறங்கிய லிவிங்ஸ்டோன் ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய டிம் டேவிட் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 221 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. மும்பை அணியின் ஹர்த்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்களை எடுத்திருந்தார்.அதே போல போல்ட்டும் 4 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
கடைசி வரை போராட்டம்: 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய அந்த அணியின் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் தலா 17 ரன்களை மட்டும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். மூன்றாவதாக வந்த வில் ஜேக்ஸ் 22 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாகுமார் யாதவ் 28 ரன்கள் எடுத்த நிலையில் யாஸ் தயாள் பந்தில் விவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருக்கு அடுத்து களம் இறங்கிய திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். 4 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள் எடுத்து அசத்திய அவர், புவனேஸ்வர் வீசிய பந்தில் பில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஹிர்த்திக் பாண்டியா 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 ஃபோர்களுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்தில், லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நமன் திர் 4 பந்துகளில் 1 சிக்ஸருடன் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மிட்செல் சாண்ட்னர் 8 ரன்களுடனும், தீபக் சாஹர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த டிரென்ட் போல்ட் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். ஜஸ்பிரித் பும்ரா ஒரு ரன்கூட எடுக்கவில்லை. கடைசி வரை போராடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்