வேலூர்: வள்ளிமலை முருகன் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 108 பால் குடங்கள் எடுத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
தமிழ் கடவுளாகப் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு வைகாசி விசாகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வைகாசி விசாக தினத்தில் கோயில்களில் பக்தர்கள் பெருந்திரளாகத் திரண்டு முருகனை வழிபடுவது வழக்கம்.
வேலூர் மாவட்டம், வள்ளிமலையில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பெண்கள் 108 பால் குடங்களை எடுத்து மலை அடிவாரத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பாலபிஷேகம் செய்தனர். பின்னர், முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து வெள்ளிக் கவசங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மேலும், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்களை செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் 108 சங்குகள் வைத்து யாகம் செய்து சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதிலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகளை ஏந்தி முருகன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் சாரை சாரையாக கோயில்களுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் இருந்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது.
