தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒன்பதாம் நாள் திருவிழாவில் நேற்று 14ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி இன்று தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. தேரோட்டம், தீர்த்தவாரி, தெப்பத் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
திருவிழாவை முன்னிட்டு கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் குடை ராட்டினம், பெட்டி ராட்டினம், பம்பரம் போல் சுழலும் ராட்டினம், தொட்டில் ராட்டினம், ஜில் ஜில் சிங்காரி ராட்டினம் என பல வகையான ராட்டினங்களும், 200க்கும் மேற்பட்ட திருவிழா கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி முதல் ராட்டினம் ஓட தொடங்கிய நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ராட்டினத்தில் ஏறி மகிழ்ச்சியுடன் திருவிழாவை ரசித்து கொண்டாடினர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தை காணவும் சென்பகவல்லி அம்மனை தரிசிக்கவும் லட்சக்கணக்கான மக்கள் கோயிலில் குவிந்தனர். கடும் வெயிலிலும் நான்கு ரத வீதிகளிலும், காந்தி மைதானத்திலும் பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து அலைமோதியது. மாலையில் இதமான சூழல் நிலவியதால் மக்கள் குடும்பத்துடன் உறவினர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இந்நிலையில் திருவிழாவிற்கான ராட்டினம் அமைத்ததில் விதிமீறல் இருப்பதாக சென்ற புகாரை தொடர்ந்து திருவிழாவில் ராட்டினம் ஓட்ட தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார். இந்த திடீர் தடை உத்தரவால் 5 மணியளவில் ராட்டினம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுவாமி அம்பாளை தரிசனம் செய்துவிட்டு, ராட்டினம் ஏறுவதற்கு சென்ற சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

செண்பகவல்லி அம்மன் கோயில் நிர்வாகத்திற்கு 50 லட்சத்திற்கு மேல் பணம் கட்டி ராட்டினம் ஓட்ட டெண்டர் எடுத்துள்ளதாகவும், ராட்டினம் ஓட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக ராட்டின ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அரசின் பிற துறைகளில் உரிய அனுமதி பெறாததாலும், விதிமீறல் புகாரை தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் தேதி முதல் ராட்டினம் ஓடிய போது அனுமதி, விதிமீறல் என எதையும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில், திடீரென ராட்டினம் ஓட்டக்கூடாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சியில் அதிகாரிகளின் மெத்தன போக்கு, அலட்சியம் காரணமாக திருவிழா காண வருகை தரும் பக்தர்கள் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்துக்களின் மனதை காயப்படுத்துவதாகவும் இந்துத்துவா அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன. விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.