தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மேலும் இந்த கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 14) கலாச்சாரம், பண்பாடு என அனைத்திலும் சிறந்து விளங்கும் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டும், தமிழ் ஆண்டின் 12 மாதங்களில் முதலாவதாக சொல்லப்படும் சித்திரை மாதம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டாக உலகத் தமிழரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஆன்மீக சுற்றுலாத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வருட பிறப்பினை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4.30 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதல் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழ் புத்தாண்டு அன்று புதிய தொழில் , கல்வி, விவசாயம் போன்றவற்றை தொடங்கினால் முயற்சி வெற்றி பெறும் என்று எண்ணி பல்வேறு தரப்பு மக்களும் இன்று முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது.
இன்று திருச்செந்தூருக்கு அதிக அளவில் வருகை தந்துள்ள பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் கோயில் வளாகம், கடற்கரை, பேருந்து நிலையம், மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு, அருள்மிகு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. இன்று தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவிரி தீர்த்தம் சுமந்தபடி பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தனர்.
மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரம் ஆனது. மலைக்கோயில் பக்தர்களுக்கு வேண்டிய விரைவு தரிசனம், குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். இன்று மாலை கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திரம் விழா நிறைவு பெறுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்