மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா, வருகிற மே 8 ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணத்தில் தொடங்கி, சித்திரைப் பெரும் திருவிழாவின் முக்கிய நாளான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12 ஆம் தேதியும் நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா மிக விசேஷமானதாகும். திருக்கல்யாணம், தேரோட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். இந்த நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மே 8 ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “ வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பெருந்திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில், ஏப்ரல் 30 ஆம் தேதி பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமியும், அம்மனும் திருஉலா நடைபெறுகிறது.
மே 1 - ஆம் தேதி கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகன உலாவும், மே 2 ஆம் தேதி தங்கப்பள்ளத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருள்கின்றனர். மே 3 ஆம் தேதி தங்க குதிரை வாகன உலா மற்றும் வேடர் பறி லீலை நிகழ்வு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்; ''ஓம் சக்தி.. பராசக்தி'' கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்! |
தொடர்ந்து, ரிஷப வாகன உலா மற்றும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை மே 4 ஆம் தேதியும், நந்திகேஸ்வரர் மற்றும் யாளி உலா மே 5 ஆம் தேதியும் நடைபெறுகிறது.மே 6 ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மற்றும் ஊடல் உற்சவம் வெள்ளி சிம்மாசன உலா நடைபெறும். தொடர்ந்து, மே 7ஆம் தேதி திக் விஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
சித்திரைப் பெரும் திருவிழாவின் 11ஆம் நாள் திருநாளான மே 9 ஆம் தேதி திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மே 11 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும், திருவிழாவின் முக்கிய நாளான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் பங்கேற்க உள்ளனர்.
வலைதள சேவை:
திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள அனைத்து சேவைகளையும் திருக்கோயிலின் வலைதள முகவரியான https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், திருக்கொயிலின் உள்ளே கைபேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.