கோயம்புத்தூர்/ராமநாதபுரம்: தமிழ் மாதங்களில் முதலாவது மாதமானது சித்திரை. இந்த சித்திரையின் முதல் நாளான இன்று (ஏப்.14) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் நீதியாகவும் பார்த்தால் சூரியன் தன்னுடைய பயணத்தை 12 ராசிகளிலும் (கோல்கள்) நிறைவு செய்துவிட்டு, மீண்டும் முதல் ராசியான மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கும் நாள், தமிழர் முறைப்படி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுடன் குரோதி வருடம் நிறைவடைந்து, இன்று முதல் விசுவாவசு வருடம் தொடங்கியுள்ளது. இந்த நாளை தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகவும், மலையாள மொழி பேசும் மக்கள் சித்திரைக்கனி (விஷு) எனவும் கொண்டாடுகின்றனர். இந்த புத்தாண்டை முன்னிட்டு அனைவரின் இல்லங்களிலும் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பல்வேறு பழங்களை வைத்து வழிபாடு செய்வர்.

அதே போன்று அனைத்து கோயில்களிலும் இன்றைய தினம் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலை கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதில், முக்கனிகளான மா, பலா, வாழை உட்பட அண்ணாச்சி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆப்பிள் உள்ளிட்ட இரண்டு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவையில் மருத மலை, ஈச்சனாரி, கோனியம்மன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், மலையாள மொழி பேசும் மக்களின் புத்தாண்டான விஷுவை ஒட்டி கோவை சித்தாபுதூர் உள்ள ஐயப்பன் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: “வாராரு… வாராரு… அழகர் வாராரு” மே 8-ல் சித்திரைத் திருவிழா தொடக்கம்! முழு விவரம் உள்ளே! |
அதேபோல், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குத் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தைச் சுற்றிப்பார்க்க பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயில்களிலும், சுற்றுலா தளங்களிலும் குவிந்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.