கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை முதல் நாளான இன்று சித்திரை விஷு திருநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமாக சாமிக்கு வைத்து வழிபாடு செய்த காய், கனிகள் வழங்கப்பட்டன.
சித்திரை முதல் நாளான இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் 'கனி காணும்' நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை, இதே நாளிலேயே கேரளாவில் சித்திரை விஷு கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் கேரள முறைப்படி சித்திரை விஷு கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருகோயிலில் சித்திரை விஷு (Chithira Vishu) வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், கனி காணும் நிகழ்ச்சியை திருக்கோயில் நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு: திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்! |
இதில் தாணுமாலயன் சுவாமி உருவத்தை தத்துரூபமாக கோலமிட்டு, அதனைச் சுற்றி முக்கனிகளான மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவையுடன் தர்பூசணி, ஆப்பிள், அன்னாசி பழம், மாதுளை, திராட்சை, வெண்டைக்காய், கேரட், வெள்ளரிக்காய் போன்ற பல்வேறு விதமான காய், கனிகளையும் வைத்திருந்தனர்.
தொடர்ந்து, தாணுமாலயன் சுவாமி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், தாணுமாலயன் சுவாமிக்கு தங்க குடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இதில், பக்தர்களுக்கு காய், கனிகளுடன் கைநீட்டமும் (பணம் பரிசளித்தல்) வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்