ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் தீ குண்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அமுதா, தீ மிதித்து பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தார். திருவிழாவில் மக்களின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், பங்குனி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் மார்ச் 24 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அன்றிலிருந்து பண்ணாரி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிராமங்கள் தோறும் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கும் திருவிழா நேற்று (ஏப்ரல் 7) நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
முன்னதாக கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பண்ணாரி அம்மன் சப்பரம், மேள தாளங்கள் முழங்க தெப்பக்குளத்திற்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இதனையடுத்து, தலைமை பூசாரி ராஜசேகர் குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரங்கள் பற்றவைத்து, குண்டத்தின் மீது பூ பந்தை உருட்டி அம்மனிடம் வரம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு அடுத்து, கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இதில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அமுதா, தீ மிதித்து பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தார். தீக்குண்டம் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்வு, அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்