ETV Bharat / opinion

தீர்க்கப்படுமா இணைய தொழிலாளர்களின் பிரச்னைகள்?

இணையதள தொழிலாளர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் சுத்தமான கழிப்பறைகள் வசதிகள் கிடைப்பதில்லை என கூறியதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம் (IANS)
author img

By Soumyadip Chattopadhyay

Published : July 11, 2025 at 10:45 AM IST

4 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று இணைய வழி வர்த்தகம். இந்த துறையில் பணியாற்றுவோர் 'கிக் தொழிலாளர்கள்' அல்லது இணைய தொழிளாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இணைய வர்த்தகம் இந்தியாவில் வேலைவாய்ப்புத் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாக நிதி ஆயோக் அங்கீகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள இணைய தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது மிகவும் கடினம். 2019-20 ஆம் ஆண்டில் 6.8 மில்லியன் இணைய தொழிலாளர்கள் இருப்பதாக நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. இது 2030-ல் 23.5 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதிகப்படியான வருவாய் வாய்ப்பு, விரும்பிய பணி நேரம், குறைந்தபட்ச தகுதி தேவையில்லாதது ஆகியவையே இன்றைய இளைஞர்கள் இந்த துறை பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியதற்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

இணைய தொழிலாளர்களில் பாதி பாதி பேர் சில்லறை வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய இரண்டு துறைகளில் உள்ளனர். இருப்பினும், மாறுபட்ட பணி நேரம், உத்தரவாதம் இல்லாத வேலை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சனைகளை இணைய தொழிலாளர்கள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.

கூடுதலாக, சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கொட்டித் தீர்க்கும் கனமழை போன்றவையும் இணைய தொழிலாளர்களின் பணிச்சூழலை மேலும் சவாலானதாக மாற்றுகின்றன. ILO என அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (2024) அறிக்கையின்படி, பெரும்பாலான தொழிலாளர்கள் வாரத்திற்கு 50 முதல் 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டியதுள்ளது. மேலும் நல்ல வருவாயை பெற வேண்டுமானால் டெலிவரி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 90 முதல் 120 கி.மீ. சவாரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், வெயில், மழையாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

இணைய தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் சவால்கள்

ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர் சங்கம் மற்றும் ஹீட்வாட்ச் என்ற அமைப்பும் இணைந்து 166 இணைய தொழிலாளர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் அவர்கள் அனைவரும் மோசமான நகர்ப்புற சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சுமார் 40 சதவீத தொழிலாளர்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை, அதே நேரத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் சுத்தமான கழிப்பறைகள் இல்லை என்று தெரிவித்தனர். 20 சதவீதத்திற்கும் குறைவான தொழிலாளர்களால் ஓய்வெடுக்க இடம் அல்லது மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டும் வசதிகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்று கூறியதாக தெரிய வந்துள்ளது.

மேலும், கழிப்பறை வசதிகள் இருந்தாலும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை என இணைய தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பல நகரங்களில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு முக்கிய பிரச்னைகளை எதிர் கொள்வதாகவும் அவர்கள் இந்த ஆய்வில் வேதனையுடன் கூறியுள்ளனர். மும்பையின் உள்ள 6800 பொதுக் கழிப்பிடங்களில் மூன்றில் இரண்டு பங்கு கழிவறைகளில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் இல்லை என்று பிரஜா அறக்கட்டளை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. பெங்களூருவைப் பொறுத்தவரை, பொது கழிப்பறைகளில் பாதிக்கும் குறைவானவை பயன்படுத்தக்கூடியவை அல்ல.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்யும் இந்த இணைய தொழிலாளர்களுக்கு பல பெருநகரங்களில் ஓய்வறைகள் கூட இல்லை என்பது தான் வேதனையின் உச்சம். மேலும், பெண் இணைய தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசம் என்றே கூறலாம். மும்பையில் 1,820 பெண்களுக்கு ஒரு பொது கழிப்பறை மட்டுமே இருப்பதாக பிரஜா அறக்கட்டளை தெரிவித்துள்ளது, மேலும் இது ஸ்வச் பாரத் மிஷன் பரிந்துரைத்த 100-200 பெண்களுக்கு ஒரு பொது கழிப்பறை என்பதுடன் ஒப்பிடும் போது இது போதுமானதாக இல்லை.

சராசரியாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய பெண்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படாமல் இருப்பது மனிதாபிமானமின்மையின் உச்சம். இது தவிர, பாதுகாப்பற்ற போக்குவரத்து மற்றும் மோசமான சாலைகள் போன்றவை பெண் தொழிலாளர்களின் பாதிப்புகளை மேலும் அதிகரிக்கின்றன. இணைய தொழிலாளர்களிடையே உள்ள பாலின விகிதம் குறைவாக இருப்பதால், இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் உரிய கவனம் பெறவில்லை.

ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கை தலையீடுகள்

பருவ நிலை மாற்ற நெருக்கடியை ஒரு தீவிரமான நீண்டகால அச்சுறுத்தலாக பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இணையத் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக வழங்குவதில் ஒவ்வொரு மாநில அரசுகளும் கவனம் செலுத்த வேண்டும். திட்டங்கள் மற்றும் அதனை தயாரிப்பதற்கு அரசுகள் இணையத் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஓய்வு அறைகள், குடிநீர் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளை செய்து தருவதை இலக்காக கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது வெயில் மற்றும் மழையில் இருந்து தப்பிக்கவும் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். பெண் தொழிலாளர்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுத்தால், இந்த துறையில் பாலின சமநிலையை உறுதி செய்ய முடியும்.

அகமதாபாத் போன்ற சில இந்திய நகரங்கள், வெயிலில் இருந்து இணையத் தொழிலாளர்களை பாதுகாக்க செயல் திட்டங்களைத் தயாரித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள நகரங்கள் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட பருவ நிலை தகவமைப்புத் திட்டங்களை சோதனை செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, வேலை நேரங்களை வரையறை செய்தல், ஓய்வு இடைவேளை மற்றும் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி போன்றவை அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரில், தொழிலாளர்களை வணிகரீதியாக மேம்படுத்துவதற்காக ஒரு வெப்ப குறியீடு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பல ஐரோப்பிய நகரங்களில், தொழிலாளர்களுக்காக பொது இடங்கள் திறக்கப்படுகின்றன. இதே போன்ற திட்டங்கள் இந்திய நகரங்களின் வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் மற்றும் புதுமையான பாணிகளில் அளவிடப்பட வேண்டும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை

ஒரு நேர்மறையான குறிப்பில், முறைசாரா தொழிலாளர்களுக்கான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) புதிய வெப்ப அலை ஆலோசனை, நகர அளவில் வெப்ப செயல் திட்டங்களை நெறிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இணைய தொழிலாளர்களை பாதிக்கக் கூடிய குழுவாகக் குறிப்பிடுவதன் மூலம், வேலை நேரங்களை வரையறை செய்தல், ஓய்வறைகள் கிடைப்பதை உறுதி செய்தல் போன்ற வெப்ப நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குகிறது. மேலும் நகர அளவிலான வெப்ப செயல் திட்டங்களில் அவர்களின் ஒருங்கிணைப்பையும் கட்டாயப்படுத்துகிறது.

மிக முக்கியமாக, தொழிலாளர் அமைப்புகள், சமூகக் குழுக்கள் உள்ளிட்டோரின் ஈடுபாட்டுடன் காலநிலைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கான கீழ்நிலை அணுகுமுறையின் நோக்கத்தை இந்த ஆலோசனை முன்னிலைப்படுத்துகிறது. இந்த ஆலோசனையை வலுவாக செயல்படுத்துவதும், அர்ப்பணிப்புள்ள பட்ஜெட் ஒதுக்கீட்டையும் சேர்த்து, தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட காலநிலை செயல் திட்டத்தை உறுதி செய்வதில் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

போதுமான அளவில் இல்லாத தரவுகள்

நிறைவாக, இணைய தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான எந்தவொரு புதிய திட்டத்தை வகுப்பதற்கும் அவர்களின் எண்ணிக்கை குறித்த தரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இது வெளிப்படையாக போதுமானதாக இல்லை. சமூகப் பாதுகாப்பு குறியீடு 2020, இணைய தொழிலாளர்கள் பற்றிய தரவை டிஜிட்டல்மயமாக்குவதை ஆதரிக்கிறது மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத் தளத்தை உருவாக்கவும், அரசின் திட்டங்களின் பயன்களை அவர்களுக்கு விரிவுபடுத்தவும் 2021 இல் e-Shram இணையதளம் தொடங்கப்பட்டது.

இருப்பினும், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இணைய தொழிலாளர்களாக தனியாக இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பதிவு செய்யப்பட்ட இணைய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த போதிய தரவுகள் அதில் இல்லை.

(பொறுப்புத்துறப்பு: இதில் இடம் பெற்றிருப்பது கட்டுரையாளரின் கருத்துக்கள். இவை ETV பாரத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்