வயதாகும்போது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களும், நேர்த்தியான கோடுகளும் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக, 30 வயதில் சரும ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில், என்றும் இளமையான சருமத்தை பராமரிக்க பின்பற்ற வேண்டியவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்: வெளியே செல்வதாக இருந்தாலும் சரி அல்லது வீட்டிற்குள் இருந்தாலும் சரி அன்றாடம் சன்ஸ்கிரின் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பரிந்துரைக்கப்படுகிறது என்கிறது NIH. மேலும், சன்ஸ்கிரின் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும் மற்றும் முகத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்: சருமத்தின் பளபளப்பையும் மென்மையையும் பராமரிக்க உடலில் போதுமான நீரேற்றத்தை பராமரிப்பது அவசியம். இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுவதோடு, வறண்ட சருமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும். எனவே தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

நல்ல தூக்கம்: சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்க தினசரி 7 -8 மணி மணி நேரம் தூங்குவது அவசியம். இது தோல் செல் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்க உதவும். தூக்கம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தூக்கமின்மை முகத்தை சோர்வாகக் காட்டக்கூடும். மேலும், கருவளையங்களை ஏற்படுத்தி, வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கும்.

சருமத்தை சுத்தமாக வைக்கவும்: தினமும் காலையிலும் மாலையிலும் முகத்தைக் கழுவுவது மிகவும் முக்கியம். இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவும். இதற்கு, நீங்கள் ஃபேஸ் வாஷ், பச்சைப்பயறு பொடி மற்றும் கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு எப்போதும் புத்துணர்ச்சியான உணர்வை தரும்.

மாய்ஸ்சரைசர்: வயதான தோற்றத்தை தடுக்க தினசரி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். மேலும், ரெட்டினோல் அல்லது பெப்டைடுகளைக் கொண்ட மாய்ஸ்சரைசர் என சருமத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சிறந்தது.

- இது தவிர, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளலாம். இது சருமத்தில் வயதான அறிகுறிகளை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். எனவே, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த மூலங்களான பெர்ரி, கீரைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்ப்பது அவசியம்.
- சருமத்தை இளமையாக வைத்திருப்பதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இளமையான, பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது.
- முகத்தை தொடர்ந்து மசாஜ் செய்வது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும். இது சருமம் தொய்வடைவதைத் தடுக்கவும் உதவும். எனவே, இரவு தூங்க செல்வதற்கு முன் 2 முதல் 3 நிமிடங்களுக்கு முகத்தை மசாஜ் செய்யலாம்.
- அதிகப்படியான சர்க்கரை நுகர்வு சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். இது கொலாஜன் வேகமாக உடைவதற்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.