கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சவாலான காலம். இது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பலர் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் ஒன்று முடி உதிர்தல். கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு மாறுவதால் சிலருக்கு முடி நன்றாக வளரவும், சிலருக்கு அதிகப்படியான முடி உதிர்தலும் ஏற்படலாம்.
குறிப்பாக, பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் கடுமையான முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இது மிகவும் இயற்கையானது என்றாலும், சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், முடி உதிர்தலை ஓரளவுக்கு எதிர்த்துப் போராடலாம். அந்த வகையில், பிரசவத்திற்கு பின்னால் பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலை தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்: ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிக்க மிக முக்கியமான விஷயம் சத்தான உணவை உட்கொள்வது. இரும்புச்சத்து, புரதம், பயோட்டின், துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவும். கீரை, பேரீச்சம்பழம், பருப்பு வகைகள், முட்டை, பனீர், கோழி, நட்ஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பாதாம், காளான்கள், ஆளி விதைகள், வால்நட்ஸ் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

தொடர்ந்து மசாஜ் செய்யுங்கள்: உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடியின் வேர்களை தூண்டுவதற்கும் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நன்மை பயக்கும். எனவே, தினமும் சிறிது சூடான எண்ணெயை உச்சந்தலையில் தடவி குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதற்கு, விளக்கெண்ணெய் , தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

நல்ல தூக்கம்: பிரசவத்திற்குப் பிறகு முதல் சில நாட்களுக்கு தாய்மார்களுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்படும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தி பின்னர் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே, பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் நல்ல தூக்கத்தை உறுதி செய்வது அவசியம்.

மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்: பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் மன அழுத்தத்தை உணருவது பொதுவானது. ஆனால் மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தலுக்கு இது ஒரு முக்கிய காரணியாகும். எனவே, உடல் செயல்பாடு, தியானம், சுவாசப் பயிற்சிகள் மற்றும் நல்ல தூக்கத்தைப் பின்பற்றுங்கள். இவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
இறுக்கமான சிகை அலங்காரங்களைத் தவிர்க்கவும்: முடி வேர்களில் அழுத்தம் கொடுக்கும் இறுக்கமான சிகை அலங்காரங்களைத் தவிர்க்கவும். மேலும், முடி உடைவதைத் தடுக்க அகன்ற பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தவும். ப்ளோ ட்ரையர்கள், ஸ்ட்ரைட்டனர்கள் மற்றும் கர்லிங் அயர்ன்கள் போன்ற வெப்ப ஸ்டைலிங் கருவிகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் தலைமுடியை உலர்த்த மென்மையான துண்டைப் பயன்படுத்த வேண்டும்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.