கொளுத்தும் கோடை வெயிலுக்கு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்ததும் அனைவரும் குளிர்ச்சியாக குடிக்க ஆசைப்படுவோம். சூட்டை தணிப்பதற்கு கிடைக்கிற குளிர்பானங்களை குடிப்பது அந்த நேரத்திற்கு தீர்வை கொடுத்தாலும், அவற்றை தினசரி குடிக்கும் போது பல விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒருமுறை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முலாம் பழத்தை வைத்து எளிமையாக செய்யக்கூடிய முலாம் பழம் சர்பத் செய்து குடித்து பாருங்க. சுவைக்கு சுவை, ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம், குளிர்ச்சிக்கு குளிர்ச்சி என அனைத்தும் கிடைக்கும். வாங்க..முலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சர்பத் எப்படி தயார் செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- முலாம் பழம் - 1
- ஜவ்வரிசி - 1/4 கப்
- பால் - 2 கப்
- கஸ்டர்ட் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 1/4 கப்
- கண்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
- தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
முலாம் பழம்/கிர்ணி பழம் சர்பத் செய்வது எப்படி?:
- முதலில் முலாம் பழத்தை தோல் மற்றும் விதை இல்லாமல் அறுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து தனியாக வைக்கவும்.
- இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதில் ஜவ்வரிசியை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- இதற்கிடையில், மற்றொரு கடாயில் பால் ஊற்றி சூடாக்கவும். அதனுடன் 1/4 கப் தண்ணீரில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கரைத்து பாலில் ஊற்றி கலந்து விடவும். பால் நன்கு கொதித்து வந்ததும், எடுத்து வைத்துள்ள கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து விடவும். அதனுடன், அரைத்து வைத்த முலாம் பழத்தை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- இப்போது அடுப்பை அணைத்து 2 நிமிடங்களுக்கு பின்னர், ஊறவைத்த சப்ஜா விதைகள் மற்றும் ஜவ்வரிசி சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனை 2 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் குடித்தால், வெயில் காலத்திற்கு உடலும் மனமும் குளுகுளுவென இருக்கும். மறக்காம ட்ரை பண்ணிப்பாருங்க.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்