வாழை..தமிழரின் வாழ்வியலில் செழிப்பைக் குறிக்கப் பயன்படும் சொல். அதனால் தான், "வாழையடி வாழையாக" என வாழ்த்துவார்கள். சுப நிகழ்வுகளில் அத்தனை அலங்காரங்களுக்கு முன்னணியிலும் முந்தி உயர்ந்து நிற்பது குலை வாழை தான். அதிலும், கொண்டாட நாட்களில் தலை வாழை இலை விருந்து இல்லாமல் நாள் நிறைவடையாது. மனித வாழ்வு அறுசுவை அடங்கியது என்பதை உணர்த்தும் வகையில், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு ஆகிய அறுசுவைகளில் உணவு செய்து உண்டு மகிழ்வார்கள். அந்த வகையில், இந்த தமிழ் புத்தாண்டிற்கு சாம்பார், பொரியல் என வாழை இலை விருந்தில் இடம்பெறும் உணவுகளை எப்படி தயார் செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு - 1/2 கப்
- வெண்டைக்காய் - 1/4 கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- பச்சை மிளகாய் - 4
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- தக்காளி -1
- கடுகு, வெந்தயம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- புளி - 1 எலுமிச்சை பழம் அளவு
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
- எண்ணெய், தண்ணீர், உப்பு - தேவையான அளவு

சாம்பார் செய்வது எப்படி?:
- குக்கரில் துவரம் பருப்பு வேக வைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில், ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து பிசுபிசுப்பு தன்மை நீங்கியதும் தனியாக வைக்கவும்.
- அடுத்ததாக அதே கடாயில், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து வதக்கவும். அனைத்தும் சிவந்து வந்ததும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் வதக்கி வைத்த வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்கவும்.
- பின்னர், மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் சாம்பார் பொடி மற்றும் 2 டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேக வைக்கவும். அடுத்தது, புளி தண்ணீர் சேர்த்து கொதித்து வந்ததும், பருப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து எடுத்தால் சாம்பார் தயார்.

பீன்ஸ்- கேரட் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
- பீன்ஸ் - 200 கிராம்
- கேரட் - 1
- பெரிய வெங்காயம் - 1
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பீன்ஸ்- கேரட் பொரியல் செய்முறை:
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலை பருப்பு சேர்த்து பொரிந்து வந்ததும், காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- இப்போது, பொடியாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் மூடி போட்டு வேக வைக்கவும். இடை இடையே கிளறி 5 நிமிடங்களுக்கு பின் துருவிய தேங்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்தால் பீன்ஸ் கேரட் பொரியல் ரெடி.

மாங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
- மாங்காய் - 1
- பச்சை மிளகாய் - 1
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - 1/4 டீஸ்பூன்
- வெல்லம் - 3/4 கப்
- வேப்பம் பூ - 3
- தண்ணீர் - தேவையான அளவு
மாங்காய் பச்சடி செய்வது எப்படி?:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இப்போது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மாங்காயை வேக வைக்கவும். மாங்காய் குலைந்து வந்ததும், வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். இறுதியாக வேப்பம் பூ சேர்த்து கலந்து எடுத்தால் அறுசுவை கொண்ட மாங்காய் பச்சடி தயார்.

உருளைக்கிழங்கு மசால் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
- வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
- பெரிய வெங்காயம் - 1
- சின்ன தக்காளி - 1
- கறிவேப்பிலை -1 கொத்து
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
- சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - 1 கொத்து
உருளைக்கிழங்கு மசால் வறுவல் செய்முறை:
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- இப்போது, மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும், வேக வைத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு மசால் வறுவல் தயார்.

ரசம் செய்வது தேவையான பொருட்கள்?:
- மிளகு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பூண்டு பல் - 2
- பழுத்த தக்காளி- 2
- புளி - 1 நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
ரசம் செய்வது எப்படி?:
- ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் சேர்த்து நைசாக அரைக்கவும். அதனுடன் பூண்டை தட்டி வைக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்.
- அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் பழுத்த தக்காளி பழங்களை சேர்த்து கைகளால் மசித்து விடுங்கள். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனதும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். அதனுடன் பெருங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நாம் அரைத்து வைத்த மிளகு சீரகம், பூண்டை இடித்து சேர்த்து வதக்கவும்.
- மசாலா மனம் வந்ததும், கரைத்து வைத்த தக்காளி சேர்த்து வதக்கிய பின், கரைத்து வைத்த புளி தண்ணீர் சேருங்கள். இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
- ரசம் நுரை கட்டி வரும் வரை அப்படியே விட்டு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழைகளை தூவினால், மிளகு ரசம் தயார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.