இட்லி மாவில் சுவையான இனிப்பு பணியாரம் செய்யலாமா? - 10 நிமிடம் போதும்!
பத்தே நிமிடத்தில் இட்லி மாவு பயன்படுத்தி சுவையான இனிப்பு பணியாரம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.

Published : July 24, 2025 at 1:46 PM IST
காலையில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா செய்து சாப்பிட்டு சலித்து விட்டதா? சற்று வித்தியாசமாகவும், அதே நேரத்தில் சுவையாகவும் வேகமாகவும் செய்யக்கூடிய ஒரு காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அப்ப, இந்த பதிவு உங்களுக்குத்தான். வீட்டில் இட்லி மாவு இருந்தால் 10 நிமிடத்தில் சட்டென தயாராகும் இந்த இனிப்பு குழி பணியாரத்தை செய்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இட்லி மாவு பயன்படுத்தி இனிப்பு பணியாரம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.
இனிப்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
- கெட்டியான இட்லி மாவு - 3 கப்
- அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- வெல்லப்பாகு - 3/4 கப்
- துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
- நெய்/எண்ணெய் - தேவையான அளவு
இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?
- ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லப்பாகு சேர்த்து கரண்டி பயன்படுத்தி நன்கு கலந்து கொள்ளவும். பாகு ஊற்றிய பின், மாவு கெட்டியான பதத்தை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த பதத்தில் பணியாரம் செய்தால், மாவு எண்ணெய்யை உறிஞ்சும்.
- அதனால், மாவை இட்லி மாவு பதத்திற்கு மாற்ற, தேவையான அளவிற்கு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து பணியாரம் சுட ஆரம்பிக்கலாம்.
- இப்போது அடுப்பில் ஒரு பணியாரக் கல்லை வைத்து அனைத்து குழிகளிலும் நெய் ஊற்றி சூடானதும், நாம் தயார் செய்து வைத்த மாவை முக்கால் குழி அளவிற்கு ஊற்றவும்.
- அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ஒரு புறம் சிவந்து வந்ததும் கத்தி பயன்படுத்தி திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் இனிப்பான இனிப்பு பணியாரம் ரெடி.
குறிப்பு:
- இனிப்பு பணியாரத்தில் கருப்பட்டி சேர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், வெல்லப்பாகை சேர்க்காமல் ஒரு கப் கருப்பட்டி பாகு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பணியாரத்திற்கு மாவின் பதம் முக்கியம். இட்லி மாவு பதத்தில் மாவு இருந்தல், பணியாரம் எண்ணெயை உறிஞ்சாது.
- பணியாரத்திற்கு மாவு கலந்த பின்னர், உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
- வெல்லம் அல்லது கருப்பட்டி பாகை காய்ச்சி, வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.


