சாம்பார் எனக்கு பிடிக்கவே பிடிக்காது எனக்கூறும் பலர், கல்யாண வீட்டிற்கு சென்றால் மட்டும் சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்கள். கேட்டால் அதுவும் இதுவும் ஒன்றா? என நம்மிடமே கேள்வி எழுப்புவார்கள். நீங்களும் இதில் ஒருவரா? இனி அந்த பிரச்சனையே உங்களுக்கு வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை பின்பற்றி வீட்டில் ஒருமுறை சாம்பார் வைத்து பாருங்க. தினம் தினம் கல்யாண வீட்டு சாம்பார் உங்கள் வீட்டிலும் மணக்கும். கல்யாண் வீட்டு சாம்பார் செய்வது எப்படி? அதற்கு மசாலா அரைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கல்யாண வீட்டு சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
- கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி - 1/4 கப் (3 டேபிள் ஸ்பூன்)
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- துருவிய தேங்காய் - 1/4 கப்
சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு - 3/4 கப்
- சின்ன வெங்காயம் - 10 ( அரை கப்)
- பெரிய தக்காளி - 1
- முருங்கைக்காய் - 2
- கத்திரிக்காய் - 2
- கேரட் - 1
- மாங்காய் - 4 துண்டு
- சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
- அரைத்த சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- கட்டி பெருங்காயம் - 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கைப்பிடி
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கல்யாண வீட்டு சாம்பார் செய்வது எப்படி?:
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வறுக்கவும். இரண்டும் நிறம் மாறியதும் மல்லி சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர், வெந்தயம், சீரகம் சேர்ந்து வறுக்கவும். கூடவே காய்ந்த மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- இதற்கிடையில், ஒரு குக்கரில் கழுவிய துவரம் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 விசில் வைத்து எடுக்கவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து விடவும்.
- இப்போது, சாம்பார் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து சிவந்து வந்ததும் கட்டி பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- அடுத்ததாக, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வெந்ததும், நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடம் சாம்பாருக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
- தக்காளி குழைந்து வந்ததும், நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்.
- காய்கறிகள் நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து கிளறி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக விடவும். இதற்கிடையில், வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும்.
- காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் நறுக்கி வைத்த மாங்காய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து கிளறி விடவும். தேவைப்பட்டால் சூடான தண்ணீர் சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.
- 5 நிமிடங்களுக்கு நன்கு கொதித்து வந்ததும், புளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் நாம் அரைத்து வைத்த சாம்பார் பொடியில் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் அஞ்சு அசல் கல்யாண் வீட்டு சாம்பார் உங்கள் வீட்டிலும் தயார். சுவைத்து பார்த்துட்டு சொல்லுங்க!
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.