சிறு வயதில் அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வளர்ந்த உணவு வகைகளில் உளுந்து வடையும் ஒன்று. ஆனால், காலப்போக்கில் உளுந்து வடை பண்டிகை நாட்களில் மட்டும் சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. இதற்கு, வடையில் அதிகமாக எண்ணெய் இருக்கும் என்பதும் ஒரு காரணம் தான். இப்படியிருக்க, எண்ணெய் குடிக்காத மொறு மொறு வடை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
உளுந்து வடை செய்ய தேவையான பொருட்கள்:
- உளுந்து - 1 1/5 கப்
- பெரிய வெங்காயம் - 1
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
- ஐஸ் கட்டி - 1 அல்லது 2
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
உளுந்து வடை செய்வது எப்படி?
- உளுந்தை இரண்டு முதல் மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
- ஊற வைத்த பருப்பை பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஐஸ் கட்டியை சேர்த்து வழுவழுப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும். இப்போது அரைத்த மாவை 5 நிமிடங்களுக்கு விஸ்க் அல்லது கைகளை பயன்படுத்தி ஒரே திசையில் நன்கு கலந்து விடவும்.
- இதற்கிடையில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
- அடுத்ததாக, அரைத்து வைத்த மாவில் சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவு தான் வடை மாவு தயார்.
- இப்போது கையை ஈரப்படுத்தி தேவையான அளவு மாவை எடுத்து உருட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு சூடான எண்ணெய்யில் போடவும். வடை சுடும் போது அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- மாவில் சலசலப்பு அடங்கி நன்கு நிறம் மாறி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்தால் எண்ணெய் குடிக்காத மொறு மொறுப்பான வடை தயார்.
டிப்ஸ்:
- வடை மாவு அரைக்க உளுந்து பருப்பை இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊற வைத்தால் மாவு கொழ கொழப்பாக இருக்கும்.
- வடை மாவு ரொம்ப கெட்டியாகவும் அதே சமயத்தில் தண்ணீயாகவும் இருக்கக்கூடாது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.