வீட்டில் ஒரு மீன் தொட்டியை அமைப்பது, உங்கள் இல்லத்திற்கு அழகையும் உயிரோட்டத்தையும் சேர்க்கும் ஒரு வழியாகும். வண்ணமயமான மீன்கள் தண்ணீரில் அழகாக நீந்திச் செல்வதைப் பார்ப்பது மனதிற்கு பெரும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, வீட்டிற்குள் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குகிறது.
குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சியையும், உயிரினங்கள் மீது அன்பையும் கற்றுக்கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. மீன்களுக்கு உணவளிப்பது, தொட்டியை சுத்தமாகப் பராமரிப்பது போன்ற செயல்கள் பெரியவர்களுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைகிறது. ஒரு சிறிய மீன் தொட்டி கூட, உங்கள் வீட்டின் சூழலை மாற்றி, இயற்கையோடு ஒரு நெருக்கமான உணர்வைத் தரும். ஆனால், பலருக்கும் மீன்களை தொட்டியில் எப்படி வளர்ப்பது? அதை எப்படி பராமரிப்பது? என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அந்த வகையில், வளர்ப்பு மீன் பராமரிப்பு மற்றும் மீன் தொட்டியை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி மீன் வளர்ப்பு நிபுணர் கார்த்திக் கூறுவதை தெரிந்து கொள்ளலாம்.

மீன் தொட்டியை சுத்தம் செய்வது எப்படி?:
- முதலில் தொட்டியில் உள்ள மீன்களை எடுத்து குளோரின் அல்லாத சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். தொட்டியில் உள்ள அசுத்தமான தண்ணீரை கீழே ஊற்றாமல் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வையுங்கள்.
- தொட்டியில் புது நீருடன் பழைய நீரையும் சேர்ப்பது முக்கியமான விஷயம். சுத்தமான நீர் 70 சதவீதம் என்றால், பழைய நீர் 30 சதவீதம் அளவிற்கு இருக்க வேண்டும். எப்போதும் முழுதாக தண்ணீரை வெளியேற்றிவிட்டு மாற்றக்கூடாது.
- மாதத்திற்கு ஒருமுறை மீன் தொட்டியை சுத்தம் செய்தால் போதுமானது. இதற்கிடையில், தொட்டி மிகவும் அழுக்காகத் தெரிந்தாலோ அல்லது மீன்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டாலோ சுத்தம் செய்யலாம்.

பராமரிப்பு டிப்ஸ்:
- முதன் முறையாக மீன் வளர்ப்பவர்கள் விலை அதிகமான மீன்களை வாங்கி வளர்க்க கூடாது. கம்மி விலையில் கிடைக்கும் மீன்களை வாங்கி மீன் வளர்ப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
- மீன்களின் வகைக்கு ஏற்ப வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி இடைப்பட்ட அளவில் வைத்திருக்கவும். ஹீட்டர் மற்றும் தெர்மா மீட்டரை பயன்படுத்தவும்.
- எந்தெந்த வகை மீன்களை ஒன்றாக தொட்டியில் விடலாம், எவற்றை விடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
- ஃபில்டர் ஒழுங்காக வேலை செய்யும் வகையில், வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யவும். ஃபில்டரின் ஸ்பாஜ்ச் அல்லது கார்பன் பகுதியை சுத்தம் செய்யும் போது தொட்டியின் நீரில் கழுவவும்.

- நீரின் ரசாயன நிலைகளை மீன் தாங்கக்கூடிய அளவில் வைக்கவும். அதற்கு pH அளவு பொதுவாக 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். இதனை கண்காணிக்க வாட்டர் டெஸ்ட் கிட் பயன்படுத்தலாம்.
- மீன்களின் தேவைக்கும் அதிகமாக உணவு இடக்கூடாது. இது தண்ணீரைக் மாசுபடுத்தும். மீன்கள் 2 முதல் 3 நிமிடங்களில் சாப்பிடக்கூடிய அளவு மட்டுமே கொடுக்கவும்.
- மீன் தொட்டியில் வைத்திருக்கும் செயற்கை அல்லது இயற்கை தாவரங்களை தூய்மையாக வைக்க வேண்டும். மாசடைந்த அழகுக் கற்கள், மற்றும் தொட்டியில் அலங்காரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.
- தொட்டியின் அடியில் சேர்ந்த கழிவுகளை வாரத்திற்கு ஒரு முறை க்ரேவல் வேக்யும் பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
- தொட்டியின் அளவை பொறுத்து மீன்களை விட வேண்டும். சின்ன தொட்டியில் நிறைய மீன்களையும், பெரிய தொட்டியில் கம்மியான மீன்களையும் விடக்கூடாது.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.