வயதாகும் போது சருமம் சுருக்கமடைவது இயல்பு தான். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களால், இளம் வயதிலேயே சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படுகின்றன. இது வயதான தோற்றத்தை கொடுப்பதால், பலரும் சங்கடத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், இளம் வயதில் நெற்றியில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க என்ன செய்வது? இயற்கை வழிகள் ஏதேனும் உண்டா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுருக்கம் ஏற்படக் காரணம் என்ன?: பொதுவாக, வயதாகும்போது, சருமம் வறண்டு, மென்மையை இழக்கும். இதன் விளைவாக நெற்றியில் மெல்லிய கோடுகள் உருவாகும். கண்களைச் சுற்றியுள்ள தோலில் சுருக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது. இருப்பினும், சிலருக்கு இளம் வயதிலேயே நெற்றியில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகத் தொடங்குகின்றன. அவை 'முன்கூட்டிய சுருக்கங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அதற்கான காரணங்கள்,
- மிகவும் வெளிர் நிற சருமம் மற்றும் மெல்லிய தோல் உள்ளவர்களுக்கு இளம் வயதில் நெற்றியில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- வெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
- பலர் தொடர்ந்து முகத்தை சுளித்து புருவங்களை உயர்த்தும் பழக்கம் உடையவராக இருப்பார்கள். இதுபோன்று செய்பவர்களுக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- மேலும், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும், அடிக்கடி ப்ளீச்சிங் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சுருக்கங்களை நீக்குவது எப்படி?: முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை நீக்க சிகிச்சை முறைகள் இருந்தாலும், சில இயற்கை குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
உடலை நீரேற்றமாக வையுங்கள்: போதுமான அளவு தண்ணீரை உட்கொள்ளவில்லை என்றால், சருமம் வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, நெற்றியில் பெரிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகின்றன. இதனால் இளம் வயதிலே பலரும் முதுமையான தோற்றத்தை பெறுகின்றனர்.

இந்தப் பிரச்சனை மோசமடைவதைத் தடுக்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்பவர்கள் விரைவாக நீரிழப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, அவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள், எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் பிற பழச்சாறுகளையும் நீங்கள் உட்கொள்ளலாம்.
இதையும் படியும்: கை, கால் முட்டி கருப்பா இருக்கா? இந்த 7 டிப்ஸ் ஃபாலோ பண்ணிப்பாருங்க! |
வெளியே செல்வதற்கு முன்..சருமத்தில் அதிகப்படியான சூரிய ஒளி படுவதால் கொலாஜன் உற்பத்தி குறைகிறது. இதன் விளைவாக, நெற்றியில் உள்ள தோல் மந்தமாகவும் கருமையாகவும் மாறும். இது சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதனால், வெயிலில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம்.
கற்றாழையில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. அதுமட்டுமின்றி, நெற்றியில் உள்ள சுருக்கங்களையும் மறையச் செய்கிறது. அதனால் கற்றாழையால் செய்யப்பட்ட பேக்குகளைப் பயன்படுத்துவது நல்லது.

மன அழுத்தம் வேண்டாம்: பதட்டம் மற்றும் மன அழுத்தம் நெற்றியில் சுருக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தையும் மனப் பதட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும். தினமும் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். சீரான உணவை உட்கொள்வதோடு, தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தடையற்ற தூக்கத்தையும் பெறுவது அவசியம்.
தூங்க செல்வதற்கு முன் இதை செய்யுங்கள்: சருமத்தை மசாஜ் செய்வது, காலப்போக்கில் தோல் சுருக்கம் மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கும். அதனால், நெற்றியில் சிறிது ஆலிவ் ஆயில் தேய்த்து மெதுவாக அழுத்தம் கொடுத்து விரல்களால் சுருக்கத்தை தெளிவாகும் படி இழுத்து விட வேண்டும். இதை, தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் செய்து வந்தால் முகத்தில் உள்ள சருமம் நீங்கி பளபளப்பாக மாறும்.
இதையும் படியும்: கருமையான உதடுகளை இளஞ்சிவப்பாக மாற்றனுமா? இயற்கை வழிகள் இதோ! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.