இளநீர் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் வாட்டியெடுக்கும் வெயிலில் இளநீரின் மகிமை பற்றி சொல்லவா வேண்டும். இளநீர் குடிக்க கடைக்கு சென்றால், வாங்கிய இளநீரில் இருந்து வாயை எடுக்காமல் ஒரே உறியில் மொத்த தண்ணீரையும் உறிஞ்சிவிடும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இப்படி உடல் சூட்டை தணிக்க இளநீர் குடிக்கும் நாம், அதை வைத்து செய்யக்கூடிய சுவையான பாயசத்தை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுலபமாக செய்யக்கூடிய தித்திக்கும் இளநீர் பாயசம் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாங்க..
இளநீர் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:
- பால் - 1/2 லிட்டர்
- கண்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
- சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
- இளநீர் வழுக்கை - 2 இளநீர்
- கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - 10
இளநீர் பாயசம் செய்வது எப்படி?:
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும், நெய் சேர்க்கவும். பின்னர், முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். இப்போது அதே பாத்திரத்தில் பால் ஊற்றி மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு காய்ச்சவும். பாலில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
- பால் கெட்டியாகி பாதியளவு வந்ததும், கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து விஸ்க் பயன்படுத்தி கலந்து 2 நிமிடங்களுக்கு காய்ச்சவும். சர்க்கரை பாலில் கரைந்ததும், அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு இளநீரின் வழுக்கை மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மற்றொரு இளநீரின் வழுக்கையை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்து வைத்த இளநீரின் வழுக்கை விழுது, நறுக்கி வைத்த இளநீர் வழுக்கை, காய்ச்சி வைத்த பால், தேங்காய் பால் மற்றும் வறுத்து வைத்த முந்திரி பருப்பு சேர்த்து கலந்தால் சுவையான இளநீர் பாயசம் தயார்.
- தயார் செய்து வைத்துள்ள இளநீர் பாயசத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும். மறக்காமல் ட்ரை பண்ணிப் பாருங்க.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்