'மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு' என்ற பாடல் வரிகள் கேட்பதற்கு வேண்டுமானால் குளுகுளுவென இருக்கலாம். ஆனால், கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் இருந்து வீட்டிற்குள் நுழைந்ததும் 'எரியுதுடி மாலா..பேனை 12ம் நம்பர்ல வை' என்கிற வடிவேலுவின் காமெடி தான் தற்போது அனைவரது வீட்டிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
வாட்டி வதைக்கும் வெயில் உடலை எரிச்சலடைய செய்யும் என்பதால் கோடை கால அவஸ்தைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உடலை கூலாக வைக்க பழங்கள், ஜூஸ்கள் என குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் எந்த பலனும் இருக்காது. ஆனால், கோடை கால தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கோடை காலத்தில் வசதியாகவும், ஸ்டைலாகவும் இருக்க உதவும் ஆடைகள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.
பருத்தி ஆடைகள்: வெயில் காலத்தில் வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, காற்றோட்டமான,தளர்ந்த பருத்தி ஆடையை அணிய வேண்டும். பருத்தி ஆடைகள் ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது. கோடை வெப்பத்தால் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை உடனே வெளியேற்றும். பருத்தி துணிகள் கிட்டத்தட்ட ஆட்டோமேட்டிக் டவலைப் போல் செயல்படுகிறது. புடவை, சுடிதார்,க்ராப் டாப்கள், சட்டை என அனைத்து வகையான ஆடைகளையும் பருத்தி துணியால் அணிவது சிறந்தது.

அரைக்கால் டவுசர்கள்: வீட்டில் இருக்கும் போது உடலை ஒட்டிக்கொண்டு இருக்கும் வகையிலான கீழ் ஆடைகளை அணிவதை தவிர்த்து அரைக்கால் டவுசர்கள் போன்றவற்றை உடுத்தலாம். ஆண்கள், பெண்கள் என அனைவரும் இரவில் தூங்கும் போது இதை பயன்படுத்துவதால் நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் வெயில் ஏற்படுத்தும் சிக்கலில் இருந்து தப்ப முடியும். காட்டன் லுங்கிகள், ஸ்கரட் போன்றவற்றை அணிவதும் இதமாக இருக்கும்.
நிறம்: கோடையில் நாம் உடுத்தும் ஆடையை தேர்ந்தெடுப்பதில் ஆடையின் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அடர் நிறங்களை விட வெளிர் நிற ஆடைகள் தான் கோடைக்கு ஏற்றவை. பளிச் சென்று இருக்கும் நிறங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். அதனால் லைட் கலர் ஆடைகளை அணியுங்கள்.

இதையும் படிங்க: கரண்ட் பில் அதிகமா வருதா? பாதியாக குறைக்க ஐடியா இதோ! |
தளர்வான ஆடைகள்: வெளியில் செல்லும் போது மட்டுமல்லாமல், நாம் வீட்டில் இருக்கும் போது தளர்வான சட்டைகளை பயன்படுத்துவது உடல் எரிச்சல், வியர்வை மற்ற பிற அசெளகரியங்களை குறைக்கும். வீட்டில் தானே இருக்கிறோம் என்று இறுக்கமான ஆடைகளை அணிவதால், உடலில் சூடு கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேலைக்கு செல்வோர் வைத்திருக்க வேண்டியவை: கோடையில் வெயில் பாதுகாப்புடன் வெளியே செல்வது தான் சிறந்தது. வேலை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டிய சூழலில், காட்டன் கையுறைகளை அணியலாம். கைகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க ஆர்ம் ஸ்லீவ் அணியலாம். அதே போல, ஸ்கார்ப், பாக்கெட் ஹாட், ஹூடி ஜாக்கெட் மற்றும் ஷால் போன்றவற்றை பயன்படுத்தலாம். கண்களை பாதுகாக்க புற ஊதாக் கதிர் தடுப்பு குளிர்கண்ணாடி அணியலாம்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.