வாழ்க்கையில் எந்த சூழலிலும் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். ஆனால், சிலருடைய நடவடிக்கைகள் நமது மன அமைதியை குலைக்கும் வண்ணம் அமையும். குறிப்பாக, அலுவலகங்களில் இந்த மாதிரியான பிரச்சனைகளை, நாம் கேட்காமலேயே நம்மை தேடி வரும். சிலரது நடவடிக்கைகள் நம்மை சங்கடத்திற்கு உள்ளாக்கும், மன உளைச்சலுக்கு தள்ளும். இந்நிலையில், வாழ்க்கையில் குறிப்பாக, அலுவலகங்களி நாம் விலகி இருக்க வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
எப்போதும் குறை கூறுபவர்கள்: இவர்கள் எப்போதும் தவறுகளை கண்டுபிடிக்கும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் நடப்பதை மறந்துவிட்டு, மற்றவர்கள் என்ன வேலை செய்தாலும் அதனை கூர்ந்து கவனித்து தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் மற்றவர்கள் முன்னிலையில் அந்த தவறுகளை குறிப்பிட்டு விமர்சனம் செய்வார்கள்.

திறமையாக செயல்பட்டு வேலையை முடித்திருந்தாலும் அதை பாராட்டாமல், எதிர்மறை கருத்துக்களை பரப்பி, சம்பந்தப்பட்டவரை குறைத்து மதிப்பிட முயற்சிப்பார்கள். அதனால், இந்த குணத்தில் யாரேனும் இருந்தாலும் அவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பதே நல்லது. உங்கள் செயல்கள் மற்றும் முடிவுகளைக் குறித்து எப்போதும் விமர்சனங்களை முன்வைப்பவர்களுடன் பழகுவது, உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம்.
நான் தான் உயர்வு என இருப்பவர்கள்: மற்றவர்களை விட தாங்களே சிறப்புமிக்கவர்களாவும், திறமையானவர்களாகவும் செயல்படுவதாக கருதிக்கொள்வார்கள். குறிப்பாக, அலுவலகத்தில் இந்த குணம் கொண்டவர்கள் அதிகம் இருப்பார்கள். இவர்கள், மற்றவர்களின் உணர்வுகளை, கருத்துகளை புரிந்து கொள்ளவோ, மதிக்கவோ மாட்டார்கள்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது தான் இவர்களது குணமாக இருக்கும். இவர்கள் மற்றவர்களை விமர்சனம் செய்யலாம். ஆனால், மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் செய்யும் பணியை மட்டம் தட்டுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
போலியாக பழகுபவர்கள்: நலம் விரும்பி போல் செயல்படுவார்கள் ஆனால் உண்மையாக பழகமாட்டார்கள். நட்பாக இருப்பது போல் வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால், பழகுவர்களிடம் வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு தேவையான ஆலோசனைகளை கூற மாட்டார்கள். எதிர்மறையான விஷயங்களை கூறி அவர்களின் வாழ்க்கையை தடுமாற்றத்துள்ளாக்குவார்கள். தேவையில்லாத சிந்தனைங்களை பரப்புவார்கள். மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கெடுப்பது போல் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
கிசுகிசுப்பவர்கள்: பணியிடத்தில் உங்களை பற்றி கிசுகிசு பேசுகிறவர்களிடம் இருந்து சற்று தூரமாகவே இருங்கள். நீங்கள் என்ன செய்தாலும் அதை பெரிய விஷயமாக மாற்றி மேல் அதிகாரியிடம் சென்று ஒன்றுக்கு இரண்டாக கூறுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள், உங்களிடம் நேர்மையாக பழக மாட்டார்கள். நீங்கள் எப்போது தவறு செய்வீர்கள் அதை எப்போது மற்றவர்களிடம் சென்று கூறலாம் என்று காத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.
உண்மையை திரித்து பேசுபவர்கள்: ஒருவர் சொல்லும் கருத்துக்களை மற்றவரிடம் கூறும் போது அதன் உண்மைத்தன்மையை திரித்து பேசும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள், பொய் சொல்லவும், மற்றவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.